Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; நண்பனைக் கொன்று புதைத்த இளைஞர்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

youth incident his friend in Tirupattur

 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ளது பலக்ல்பாவி. இங்குள்ள முருகன் கோவில் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி அன்று ஆடு மேய்க்கச் சென்றவர்கள், குழி ஒன்றில் அரைகுறையாக மூடப்பட்டுள்ள பள்ளத்திலிருந்து துர்நாற்றம் வீசி ஈக்கள் மொய்ப்பதைக் கண்டு அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்து யாரோ புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். அதனை பெரியவர் ஒருவர் குச்சியால் தோண்டியுள்ளார். அப்போது மனித கால்கள் மட்டும் தெரிந்த நிலையில் பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

உடனடியாக திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் மற்றும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் வந்தனர். வருவாய்த்துறையினர் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டி பார்த்தபோது, சில நாட்களுக்கு முன்பு கொலை செய்து புதைக்கப்பட்ட சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று உடலில் துணி எதுவும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். இந்த கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைத்தார். உடல் தோண்டியெடுக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் கொல்லப்பட்டவரை அடையாளம் காண முடியாத நிலையில், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளனர்.            

 

இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மல்லகுண்டா அடுத்த சுண்ணாம்பு காரகொள்ளை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மகன் விஜயகுமார் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காணவில்லை என்றும் அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் எனப் புகார்  கொடுத்தார். புகாரில் கடந்த மாதம் 15 ஆம் தேதி மேஸ்திரி வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. விஜயகுமார் மலேசியா சென்று வேலை பார்த்து வந்தவர், அது செட்டாகாமல் ஐந்து மாதத்துக்கு முன்பு ஊர் திரும்பியதாகவும் இரண்டு மாதங்களாகச் சொந்த ஊரில் இருந்து வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்தது.          

 

விஜயகுமார் அவரது மனைவி வினிதா(25) என்பவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த தீபாவளி அன்று கணவனுடன் சண்டையிட்டு அவரது தாய் வீடான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கடந்த 21 ஆம் தேதி கொன்று புதைக்கப்பட்ட நபர் ராஜாவின் மகன் விஜயகுமார்(29) என்பதும் அவர் காட்டிய அடையாளங்களைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இறந்து போன விஜயகுமாரின் செல்போன் நம்பர்களை கண்காணித்து விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது அந்த நம்பர் அவருடைய நண்பரான திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரன்(24) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது.

 

இறந்து போன விஜயகுமாரின் மனைவி வினிதாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விஜயகுமாரின் நண்பர் ராகவேந்திரனிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்தேன். கடந்த நவம்பர் 15 ஆம் தேதி ராகவேந்திரனும் நானும் ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி தனிமையில் இருந்தோம். அப்போது என் கணவர் அடிக்கடி சந்தேகப்பட்டு என்னை டார்ச்சர் செய்து வருவதாக அவரிடம் கூறினேன். நான் பார்த்துக்கறன்னு ராகவேந்திரன் சொன்னார். கடந்த 19 ஆம் தேதி ராகவேந்திரன் விஜயகுமாருக்கு போன் செய்து தனியாக வரவழைத்து அவருக்கு மது பாட்டில்களை வாங்கி கொடுத்து கொலை செய்து மண்ணில் புதைத்து விட்டு தலைமறைவாக ஆனது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது எனக் கூறியதாக தெரிகிறது.            

 

அதனைத் தொடர்ந்து ராகவேந்திரனை பிடித்த காவல்துறையினர், கொலை எவ்வாறு நடந்தது, கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் அவர் அணிந்திருந்த துணி ஆகியவற்றை கைப்பற்றி அவருக்கு உதவிய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரையும் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்