/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/997_111.jpg)
ஓசூர் அருகே, 3 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த இளைஞரை, நண்பர்களே மது போதையில் கல்லால் அடித்துக் கொலை செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்கண்டபள்ளி அருகே உள்ள தேசிங்கு நகரில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் விவேக் சர்மா, ஓசூர் சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்தவர், மூக்கண்டபள்ளியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (29) என்பதும், அந்த பகுதியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவருடைய அலைபேசியில் பதிவாகியுள்ள எண்களை சேகரித்து விசாரித்தனர். அதில், இரண்டு பேர் அவருடன் அடிக்கடி தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். பிடிபட்ட இருவரில் ஒருவர் மூக்கண்டப்பள்ளியைச் சேர்ந்த பிரபு (23) என்பதும், மற்றொருவர் மார்க்ஸ் (31) என்பதும், இவர்களும், சடலமாகக் கிடந்த மஞ்சுநாதனும் நண்பர்கள் என்பதும் தெரிய வந்தது. மஞ்சுநாதன், அவர்களிடம் 3 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி வந்துள்ளார்.
இந்நிலையில் நான்கு நாள்களுக்கு முன்பு இரவு, மூவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது கடன் கொடுக்காதது குறித்து பிரபுவும், மார்க்சும் கேட்டுள்ளனர். அதில் அவர்களிடையேதகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த இருவரும், கீழே கிடந்த கல்லை எடுத்து மஞ்சுநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் நண்பர்கள் இருவரும் சடலத்தை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பிரபு, மார்க்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை ஞாயிற்றுக்கிழமை (பிப். 19, 2023) ஓசூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். அவருடைய உத்தரவின் பேரில், இருவரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மூவாயிரம் ரூபாய் கடனுக்காக நண்பனையே கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)