Skip to main content

வரதட்சணை கொடுமை; இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Young woman lost their life due to dowry

 

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர், பெண்ணாடம் பேரூராட்சி திருமலை அகரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வலிங்கம். இவரின் மகள் காயத்திரிக்கும்(25) அரியலூர், சிலப்பனூரில் வசிக்கும் அருள்மணியின் மகன் வீரமணிக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. கணவர் வீரமணி தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. வீரமணி - காயத்திரியின் திருமணத்திற்கு பெண் வீட்டில் இருந்து 15 பவுன் நகை மற்றும் சீர் வரிசை பொருட்களை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். திருமணத்திற்கு பின்புதான் சொந்த வீடு கட்டுவதாக வீரமணி பெண் வீட்டாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணமும் நடைபெற்றிருக்கிறது. 

 

இந்த நிலையில் திருமணம் நடந்த சில ஆண்டுகள் கழித்துக் காயத்திரி தனது கணவர் வீரமணியிடம் வீடு கட்டுவது குறித்துப் பேசியுள்ளார். அப்போது, காயத்திரியை அவரது தந்தையிடம் கணவர் வீரமணி பணம் வாங்கி வரச்சொல்லியுள்ளார். மேலும் வீரமணியின் தாய் பட்டாத்தாள், தந்தை அருள்மணி, அண்ணன் வேலுமணி ஆகியோர் காயத்திரியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். தொடர்ந்து, காயத்திரி கழுத்திலிருந்து தாலியைப் பறித்துவிட்டு வீரமணிக்கு மறுமணம் செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து காயத்திரி வீரமணியின் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

நடந்த சம்பவத்தைக் காயத்திரி தனது பெற்றோர் வீட்டில் சொல்ல, தந்தை விஸ்வலிங்கம் அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். பின்னர், போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரித்துள்ளனர். போலீசார் முன்னிலையில் வீரமணி, சொந்த வீடு கட்டும் வரை காயத்திரி தாய் வீட்டில் இருக்கட்டும், வீடு கட்டிய பிறகு அழைத்துச் செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது தாலியைத் திரும்பித் தருமாறு காயத்திரி கேட்டுள்ளனர். ஆனால் தாலியை தர மறுத்து வீரமணியின் வீட்டார் காயத்திரியை தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இதனால் வேதனையடைந்த காயத்திரி, வீட்டிற்குச் சென்று தீயிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது காயத்திரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த காயத்திரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து விஸ்வலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் வீரமணி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடத்தில் வைத்து கள்ளச்சாராயம் விற்பனை- 10 ஆக உயர்ந்த உயிரிழப்பு!

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
10 lose their live related to sale of fake liquor in jugs

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் தரப்பில் உயிரிழப்பு கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனச் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் மறுபுறம் கள்ளச்சாராயம் குடித்ததாலேயே நான்கு பேர் இறந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை மேற்கொண்டு வந்த சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிகண்டன்(35), மேலும் பெண் ஒருவர், ஆண்கள் நான்கு பேர் என உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் குடத்தில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்கும் வீடியோ காட்சி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மொத்தமாக இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் விவரம்; சுரேஷ், பிரவீன், சேகர், கந்தன், ஆறுமுகம், ஜெகதீஷ், மணிகண்டன், மணி, கிருஷ்ணமூர்த்தி, இந்திரா ஆகியோர் எனத் தெரியவருகிறது.

Next Story

நான்கு உயிர்களைப் பறித்த கள்ளச்சாராயம்; சாராய வியாபாரி கண்ணுக்குட்டி கைது

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
nn

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சாராயம் குடித்த ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் பலியான  சம்பவத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை யாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கள்ளச்சாரயம் குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேசமயம் உயிரிழந்த 4 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கவில்லை என்று கூறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார். ஆனால் உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் கள்ளச்சாராயம் குடித்துதான் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

nn

இது தொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது, இரவு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகுதான் கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவைகள் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம் கேட்டதற்கு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வந்தேன் என்றார்கள். கள்ளச்சாராயத்தினால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கடைசி குடும்பம் எங்கள் குடும்பமாக இருக்கட்டும். இனிமேலாவது கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராய வியாபாரியான கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.