Skip to main content

இதை ஒரு விபத்தா நினைச்சுக்கிறேன்... காதல் ஒருபோதும் மாறாது... தந்தையால் மகன் எடுத்த அதிரடி முடிவு!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

நம்பமுடியாத விஷயங்களை, சினிமாவில்தான் இப்படி நடக்கும் என்பார்கள். ஆனால் சமயங்களில் சினிமாவில்கூட நடக்காத விஷயங்கள் யதார்த்த வாழ்க்கையில் நடந்துவிடுகிறது. சொந்த மகன் காதலித்த இளம்பெண்ணை, கடத்திச் சென்று தாலிகட்டி, நண்பர்களின் உதவியோடு வெறிநாயைப் போல மாறி தந்தை சீரழிக்க, மீட்டுவரப்பட்ட தன் காதலியை தாராள மனத்தோடு திருமணம் செய்துகொண்டு ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் மகன்!
 

incident



நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை என்கிற பசுமையான கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம். 50 வயதான இவர் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகராக இருந்துவருகிறார். இவரது மகன் முகேஷ் கண்ணன் அங்குள்ள ஐ.டி.ஐ. ஒன்றில் படிக்கும்போது, வகுப்புத் தோழியான நாலுவேதபதி கிராமத்தைச் சேர்ந்த கீதாவை காதலித்து வந்திருக்கிறார். (பெயர் மாற்றியுள்ளோம். காதல், ஒருகட்டத்தில் தாலிகட்டாமல் தனிக்குடித்தனம் வரை வளர்ந்திருக்கிறது. இருவரும் சென்னையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு, வாடகைக்கு வீடெடுத்து கணவன் மனைவியைப் போலவே வாழ்ந்துள்ளனர்.

என்ன நடந்ததென முகேஷ்கண்ணனின் நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டோம். "முகேஷ்கண்ணன் கீதா இருவரும் காதலித்து தனிக்குடித்தனம் இருக்கும் விவகாரம் இரண்டு வீட்டிற்கும் தெரியவர பெண் வீட்டில் எதிர்ப்பு வெளிப்பட்டது. முகேஷ்கண்ணன் தன்னுடைய காதலால் தனது சகோதரியின் வாழ்க்கை பாழாகிவிடக்கூடாது என முடிவுசெய்து, பொங்கல் லீவில் வந்தவன், கீதாவை மட்டும் சென்னைக்கு அனுப்பிவிட்டு பெற்றோரிடம் பேசிவந்தான். கண்ணன் தனது காதலியிடம் செல்போன் மூலம் பேசிக்கொண்டிருந்ததை அடிக்கடி ஒட்டுக்கேட்ட நித்தியானந்தம், ஒரு கட்டத்தில் கண்ணனின் செல்போனில் கீதாவின் போட்டோக்களைப் பார்த்து சபலத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

 

incident



கீதாவை அனுபவித்து விட்டு, தீர்த்துக் கட்டிவிட முடிவுசெய்து அவளது செல் போனில், ’இளசுகளைப் பிரிச்சு வெச்ச பாவம் எதுக்கு;… உங்க திருமணத்தை நடத்திவைக்க நாங்க முடிவு செஞ்சுட்டோம், உடனே வீட்டிற்குப் புறப்பட்டு வா',’’ என்று கூற இதை நம்பிய கீதா 19 ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து கிளம்பி செம்போடைக்கு வந்து, கண்ணன் வீட்டிலேயே ஒரு வாரம் தங்கியிருக்கிறார்.

சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்த கருப்பு நித்தியானந்தம், 27 ஆம் தேதி இரவு கீதாவை அழைத்து, "உங்க வீட்டுக்கு போவோம், நாங்க முறைப்படி அங்கவந்து பெண் கேட்கிறோம். என்று கூறி காரில் கீதாவை அழைத்துக்கொண்டு கிளம்பியவர், அந்த பெண் வீட்டிற்குப் போகாமல் கையும், காலையும் கட்டி தூக்கிவந்து, அவருக்குச் சொந்தமான ஜவுளிக்கடையில் மறைத்துவைத்திருக்கிறார். அவரிடமிருந்த செல்போனை பறித்துக்கொண்டு அன்று இரவு முழுவதும் தன் விருப்பத்திற்கு, கொடூரமான முறையில் அத்து மீறி நடந்துகொண்டுள்ளார்.


இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளம்பெண், “நான் உங்க மகனுக்கு மனைவியாகப் போறவ, என்னிடம் இப்படி நடக்கலாமா' என்று கத்தியிருக்கிறார். காமவெறி உச்சத்துக் கேறிய அவரது காதில் கீதாவின் கெஞ்சல்களோ… நியாயங்களோ விழவேயில்லை. அதன்பிறகு கீதாவை தன் நண்பர் அவரிக்காட்டை சேர்ந்த சக்திவேல் வீட்டிற்கு வாடகைக் கார் ஒன்றில் அழைத்துச்சென்று, அந்த பெண்ணுக்கு தாலிகட்டி இரண்டு நாள் அடித்தும், பாலியல் தொல்லை கொடுத்தும், சித்ரவதை செய்துள்ளார். கீதாவை நித்தியானந்தம் கடத்திவந்து சித்ரவதை செய்வது, கண்ணனுக்கு கார் டிரைவர் மூலம் தெரியவர, கண்ணன் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவலைக் கூறி கீதாவைக் காப்பாற்றிவிட்டார்.

ஆரம்பத்தில் பா.ஜ.க.விலிருந்த நித்தியானந்தம் பிறகு அதிலிருந்து விலகி அ.ம.மு.க.வில் இணைந்தார். இதற்குமுன்பும் தன்னிடம் வேலைக்கு வரும் பெண்களிடம் முறைதவறி நடந்து கொண்டிருக்கிறார் என்று பேச்சிருக்கிறது. நித்தியானந்தத்தின் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்களுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர்கள் சக்திவேல்-பவுன்ராஜவள்ளி தம்பதி. இப்போது நடந்ததெல்லாம் நித்தியானந்தத்தின் மனைவிக்குத் தெரிந்ததும், ஆரம்பத்தில் கீதாவை ஏற்றுக் கொள்ள மறுத்தவர் தற்சமயம் மருமகளாக ஏற்றுக்கொண்ட தோடு, "நித்தியானந்தத்தை யாரும் ஜாமீன் எடுக்கக்கூடாது' என்றும் கூறிவிட்டார்’ என்றார்கள் விவரமாக.

அதிரடியாக நடவடிக்கை எடுத்து கீதாவை மீட்டு காதலனோடு சேர உதவிய வேதாரண்யம் டி.எஸ்.பி. சபியுல்லா சுருக்கமாக நடந்ததை விளக்கினார். "எங்களுக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு வேலையில் இறங்கினோம், அந்த பெண் உடல் முழுவதும் காயம். ரொம்பவே பயந்திருந்தார். அவரை அழைத்துச் சென்று சிகிச்சையுடன் உரிய கவுன்சிலிங்கும் கொடுத்தோம். குற்றவாளிகள் கருப்பு நித்தியானந்தம், சக்திவேல், அவரது மனைவி பவுன்ராஜவள்ளி ஆகிய மூவர் மீதும் பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி, அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் என பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம்.

முகேஷ்கண்ணனிடம் எடுத்துச் சொன்னோம். அவர் ரொம்பவும் தெளிவாக, "ஒரு வெறிநாய் குதறிடிச்சி... இதை ஒரு விபத்தா நினைச்சுக்கிறேன். கீதாவுடனான காதல் ஒருபோதும் மாறாது'' என... கோவிலில் கிராமத்தினர் ஆசியோடு கீதாவைத் திருமணம் செய்துகொண்டார்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்