கடைக்கார பெண்மணியின் மீது மாவுப்பாக்கெட்டை வீசி அவமானப்படுத்தி தாக்குதலுக்குள்ளான ஜெயமோகன் குறித்து 'ஜெயமோகனுக்கு ஒரு வேண்டுகோள்' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது முகநூலில் இப்படி எழுதியுள்ளார்.
ஜெயமோகன் பிரச்சினை குறித்து முழு விவரங்களையும் கேட்டு அறிந்தேன். நாகர்கோவில் நண்பர்கள் உதவினார்கள். ஒரு சாதாரண பிரச்சினையை அவர் இத்தனை சிக்கலாக்கியிருக்க வேண்டியதில்லை. உள்ளூர் நண்பர்கள், இதுபோன்று மாவு பாக்கெட்கள் விற்கும் சிறு கடைக்காரர்கள் ஆகியோரிடமும் பேசியபோது ஜெயமோகன் சற்று பொறுமையாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. அன்றாடம் எத்தனையோ அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு போகிறோம். உடைந்து கிடக்கும் சாலைகள், ஏமாற்றும் கான்டிராக்டர்கள் இவை குறித்தெல்லாம் நாம் கவலைப்படாமல் கடந்துபோய் விடுகிறோம். இப்படியான பிரச்சினைகளை இந்த 'லெவலு'க்குக் கொண்டு சென்றிருப்பது ஒரு அப்பட்டமான "மிடில் கிளாஸ் மென்டாலிட்டி" என்றுதான் சொல்ல வேண்டும்.
திருச்சியிலிருந்து ஒரு நண்பர் ஜெயமோகன் 2008ல் எழுதிய பதிவொன்றை அனுப்பி இருந்தார். ஒரு முறை ஜெயமோகன் ATM கதவு ஒன்றைச் சரியாகத் திறக்கத் தெரியாமல் அதை உடைத்துத் திறந்து வெளிவந்த கதையை அவரே எழுதியது அது. அதைப் படிக்கும்போது ஒன்று விளங்குகிறது. தான் ஒரு எழுத்தாளன் என்கிற வகையில் ஏகப்பட்ட சிந்தனைகளைச் சுமந்து எப்போதும் தாஸ்தாவெஸ்கி, காம்யூ போன்ற சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கும்போது இப்படித்தான் பொறுமை இல்லாமல் நடந்து கொள்ள முடியும் என அவர் தன்னை நியாயப்படுத்துகிறார். மூர்க்கமாக நடந்து கொண்ட அச்சம்பவத்தையும் தனது மேதமையின் அடையாளமாகச் சித்திரிக்கும் அம்முயற்சி உண்மையில் நேற்று வாசிக்கும்போது எனக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்தியது. ATM கதவை உடைப்பது பெரிய குற்றம். அது, வழக்காகி இருந்தால் சிக்கல். எனினும் ஒரு எழுத்தாளர் என்கிற வகையில் அந்த வங்கி அதிகாரிகள் மிக்க பொறுமையுடன் அந்த நிகழ்வைக் கையாண்டுள்ளனர். அவர்களே அதை 'ரிப்பேர்' செய்து உரிய தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு வழக்கு ஏதும் இல்லாமல் செய்துள்ளனர். அவர்களின் அந்தப் பொறுமைக்கு ஒரு நன்றி தெரிவிக்கும் பண்புகூட அப்பதிவில் ஜெயமோகனிடம் காணவில்லை.
இப்படியான ஒரு புளித்த மாவுப் பிரச்சினையில் நானாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனச் சற்று யோசித்துப் பார்த்தேன். மாவு புளித்திருக்கு என மனைவி சொல்லி இருந்தால், "சரி அதைத் தூக்கி எறி. வீட்டில் கோதுமைக் குருணை இருந்தால் கொஞ்சம் கஞ்சி போடு. சாப்பிட்டுவிட்டுப் படுப்போம். உடம்புக்கும் நல்லது" என்று அது இப்படியான சம்பவமாக ஆக்கப்படாமல் கழிந்திருக்கும்.
இரண்டு விடயங்கள் முடிக்கு முன்:
1. அந்த கடைக்காரர் செல்வம் என்பவர் குறித்தும் நாகர்கோவில் நண்பர்கள் ரொம்பவும் நல்ல அபிப்பிராயத்தையே சொல்கின்றனர்.
2. மருத்துவமனையில் அட்மிட் ஆகும் அளவிற்கு ஜெயமோகனுக்கு ஒன்றும் இல்லை. வழக்கை மெய்ப்பிப்பதற்காகவும், வலுவாவதற்காகவும் வழக்கமாக எல்லோரும் செய்யும் தந்திரம்தான் இது என்பதை பாரதி மணி போன்ற பெரியவர்களும் கூடப் பதிவு செய்துள்ளனர். அரசு மருத்துவர் ஒருவர் இப்படி வழக்குக்காக அரசு மருத்துவமனையில் வந்து வேண்டுமென்றே படுத்துக் கொள்வது எப்படி ஒரு உண்மையான நோயாளிக்குக் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதியைப் பாதிக்கிறது என அவர் உளமார்ந்த வருத்ததுடன் எழுதியிருந்தது நெஞ்சைத் தொடுகிறது.
இந்தப் பின்னணியில் நான் ஜெயமோகனிடம் முன்வைக்கும் அன்பான வேண்டுகோள் இதுதான். ஜெயமோகன் கடைக்காரர் செல்வத்தின் மீது தொடுத்துள்ள வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டு இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும்.
நாகர்கோவில் எழுத்தாள நண்பர்களான லட்சுமி மணிவண்ணன் முதலானோர் இதற்கு உதவ வேண்டும்..
ஜெயமோகனிடமிருந்து வேறு பல நியாயமான காரணங்களுக்காக கருத்து வேறுபடுபவர்கள் இச்சம்பவத்தைப் பயன்படுத்தி அவரை வசைபாடுவதை நிறுத்திக் கொள்வோம்.