Skip to main content

ராமநாதபுரத்தில் நிகழ்ந்த உலக மரபு வார விழா தொல்லியல் கருத்தரங்கம்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

World Heritage Week Festival Archeology Symposium held at Ramanathapuram

 

தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தினார்கள்.

 

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆ.ஆனந்த் அனைவரையும் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கைத் தாவரங்கள், நாணயங்கள் உள்ளிட்ட தடயங்கள் பற்றியும்; ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் ம.சுரேஷ் கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும்; கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி வே.சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்ககால தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பற்றியும் படங்களுடன் விளக்கினர். உதவிப் பேராசிரியர் பெ.கோபாலகிருஷணன் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.