Skip to main content

கணநேரத்தில் 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; வேளச்சேரியில் சோகம்

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

 The workers were momentarily trapped in a 40-foot ditch; Tragedy in Velachery

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் லைலேண்ட் நிறுவனத்தால் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர். தற்போது வரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் பள்ளத்தில் சுற்றியுள்ள மழை நீர் இறங்கி வருகிறது. கணநேரத்தில் நிகழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கனமழை எதிரொலி; நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Heavy rain echoes; Holiday for four taluk schools

தமிழகத்தில் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (19.07.2024) அதி கனமழை பெய்யக்கூடும். அதாவது 21 செ.மீ.க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் இன்று 12 செ.மீ. முதல் 20 செ. மீ. வரை மிக கனமழை பெய்யக்கூடும். அதோடு திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோயம்புத்தூரில் நாளை (20.07.2024) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

நீலகிரியில் இன்று  நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளையும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரியில் நாளை நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பின் படி  உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

தொடர் மழை எதிரொலி; 2 நாட்களில் 8 அடி உயர்ந்த பவானிசாகர்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Continuous rain echo; Bhavanisagar 8 feet high in 2 days

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அதேபோல் பில்லூர் அணையும் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 816 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 80.32 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 600 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடியும் என மொத்தம் 1, 205 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதேபோல் 41 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 38.83 அடியாக உள்ளது. அதேபோல் 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.93 அடியாக உயர்ந்துள்ளது.