Women and farmers  demanding water

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே எம்.குரும்பபட்டி உள்ளது. இந்த குரும்பபட்டி கன்னிமார் சமுத்திரம் கண்மாய், கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால், இப்பகுதியில் விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisment

மருதாநதி அணையில் இருந்து உபரிநீர் பெறும் அளவிற்கு மட்டுமே கண்மாய் செயல்பாட்டில் உள்ளது. தற்போது பெய்த தொடர் மழை காரணமாக மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாசனக்கண்மாய்கள் பெரும்பாலானவை நிரம்பிவிட்ட நிலையில், கடைசியாக உள்ள கன்னிமார் சமுத்திரம் கண்மாய்க்குத்தண்ணீர் வராமல் நின்றுபோனது. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதில், ஆத்திரமடைந்த கன்னிமார் சமுத்திரம் கண்மாய்ப் பாசன விவசாயிகள், குரும்பபட்டி கிராமத்துப் பெண்கள் மற்றும்பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் கனகதுரை தலைமையில் வறண்ட கண்மாய்க்குள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

தண்ணீர் கேட்டு முழக்கங்களை எழுப்பினர். பின்னர் திடீரென அனைவரும் வத்தலக்குண்டு மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பும் பதட்டமும் நிலவியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களில் தண்ணீர் தருவதாக உறுதி அளித்ததை அடுத்து, சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை வத்தலக்குண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.