Skip to main content

“வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும்; விலகி இருப்பதும் நல்லது” - தற்கொலைக்கு முயன்ற பெண் எஸ்.ஐ. சங்கீதா

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

woman SI tried to lost their life in Pudukkottai

 

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் எஸ்.ஐ அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகள் தின்று ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தற்கொலை முயற்சிக்கு முன்பு அவர் தனது வாட்ஸ்அப்பில் வைத்துள்ள “வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும், சிலரிடமிருந்து விலகி இருப்பதும் நல்லது. சுயநலத்திற்காக அல்ல தன்மானத்திற்காக” என்ற பதிவு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் கீழ சவேரியார்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜ் - ஜாஸ்மின் வித்யா தம்பதியினர். ஜாஸ்மின் வித்யா தனது கணவர் ஆரோக்கிய ராஜ் மீது சமூக நலத்துறை அலுவலகத்தில் வரதட்சணை புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்காக ஜாஸ்மின் வித்யாவிற்காக வழக்கறிஞர் கலீல் ரகுமான் சமூக நலத்துறை அலுவலகம் சென்றுள்ளார். 

 

சமூக நலத்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி, ஜாஸ்மின் வித்யாவின் வழக்கறிஞரான கலீல் ரகுமானை வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு புகார் குறித்து ஆரோக்கியராஜிடம் விசாரணை நடத்தினார். விசாரணை முடிந்து வெளியே வந்த ஆரோக்கியராஜ், வழக்கறிஞர் கலீல் ரகுமானை ஒருமையிலும் ஆபாசமாகவும் திட்டிவிட்டு  அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக கலீல் ரகுமான் திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அவரது செல்போன் திருப்பி வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

woman SI tried to lost their life in Pudukkottai

 

இந்த நிலையில் புகார் கொடுக்கச் சென்ற இடத்தில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கீதா, தன்னை அவதூறாகப் பேசியதாக வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலீல் ரகுமான் முறையிட்டிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய எஸ்.ஐ சங்கீதாவை இடமாற்றம் செய்வதாக முடிவானது. அதன்படி திருக்கோகர்ணம் எஸ்.ஐ சங்கீதா ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

 

நேற்று காலை திருக்கோகர்ணம் காவல் நிலையம் சென்ற எஸ்.ஐ சங்கீதா, தனக்கு விடுப்பு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு லீவு கிடைக்கவில்லை. லீவுக்காக கடிதம் எழுதி வைத்தவர் மன உளைச்சலுடன் மாலை வீட்டிற்கு வந்து அதிகமான தூக்க மாத்திரைகளைத் தின்று மயங்கி இருக்கிறார். வெகு நேரமாக எழாத அவரை உறவினர்கள் பார்த்து தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

எஸ்.ஐ சங்கீதா தற்கொலை முயற்சி செய்து சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து காவல் நிலைய நாட்குறிப்பை பார்த்த போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. லீவ் லெட்டருடன் ‘தன் சாவுக்கு காரணம் வழக்கறிஞர்களின் போராட்டமே. தவறு செய்யாத எனக்கு பணியிட மாற்றம். என் சாவுக்கு பிறகாவது போலீசாருக்கு நல்லது நடக்கட்டும்’ என்று எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

woman SI tried to lost their life in Pudukkottai

 

மேலும் போலீசார் கூறும் போது, வழக்கறிஞர் புகாரில் கூறப்பட்டுள்ள நபர் மீது வழக்குப் பதிவு செய்தாகிவிட்டது. அதன் பிறகு போராட்டம் செய்து போராட்டத்தின் போது சங்கீதா எஸ்.ஐயை தரக்குறைவாக சிலர் பேசியுள்ளனர். மேலும் போலீசாருக்காக இனிமேல் எந்த வழக்கிற்காகவும் யாரும் ஆஜராகக் கூடாது, அவர்களை நீதிமன்றத்தில் உட்கார வைக்கக் கூடாது என்றெல்லாம் பொது வெளியில் பேசியுள்ளனர். இந்த மன உளைச்சலில் இருந்த எஸ்.ஐ, தவறு செய்யாத தனக்கு இடமாறுதல் கொடுத்து விடுப்பும் தரவில்லை என்ற விரக்தியில் இப்படி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வருகிறார் என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சிலைக்கு மரியாதை செலுத்திய மருத்துவக்கல்லூரி முதல்வர்!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
medical college principal paid respect to statue of Dr. Muthulakshmi Reddy

முதல் பெண் மருத்துவர், சென்னை மாகாணத்தின் முதல் சட்ட மேலவை உறுப்பினர் என்று பல்வேறு "முதல்" என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. 1886 ஜூலை 30 ம் நாள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதிக்கு மகளாக பிறந்த முத்துலெட்சுமி ரெட்டி பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற தடைகளை உடைத்து கல்லூரிச் சென்று படித்து மருத்துவரானார். 

தொடர்ந்து தேவதாசி முறை ஒழிப்பு, குழந்தை திருமணத் தடுப்பு, விதவை மறுமணம் செய்யவும் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்கவும் போராடினார். பெண் கல்வி, உரிமைக்காக போராடியவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக காரணமான இவர் 1968 ஜூலை 22 ந் தேதி மறைந்தார். 

இவரது நினைவை போற்றும் விதமாக புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மாவட்ட மருத்துவமனை இயங்கியது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. அந்த வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை வைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று(22.7.2024) அவரது நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வர் டாக்டர் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

Next Story

“ஒரு அரசியல் தலைவர் உயிரிழப்பார்” - அருள் வாக்கு சொன்ன கோவில் பூசாரி

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
temple priest predicts that the political leader will lost life

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மீமிசல் குடியிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற "வழிவிடும் கருப்பசாமி கோயில் உள்ளது. தினசரி பக்தர் வந்து போனாலும் ஆடி பௌர்ணமி திருவிழாவே மிகச் சிறப்பு. இந்த நாளில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுகிறார்கள்.

ஆடி பௌர்னமி திருவிழாவில் என்றதும் மீமிசல் சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் ஏம்பக்கோட்டை ஸ்ரீ தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் இருந்து வானவேடிக்கை, ஆட்டம் பாட்டத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் பால்குடம் மற்றும் பறவை காவடி, அலகுகாவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கருப்பசாமி கோவிலை வந்தடைந்தனர். அங்கு கருப்பசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து கருப்பசாமி அரிவாள் மீது நின்று அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் பூசாரி மாதவன் அரிவாள்கள் மீது ஏறி நின்று சாமி ஆடி முதலில் நாட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று நாட்டுக்கான நல்வாக்கு சொல்லத் தொடங்கினார்.

temple priest predicts that the political leader will lost life

இந்த வருசம் விளைச்சல் அதிகமாகும், ரியல் எஸ்டேட் தொழில் நல்லா இருக்கும். இந்த ஆண்டு ஒரு அரசியல் தலைவர் உயிர் சேதம் ஏற்படும். போன வருசம் சொன்னேன் நடந்துச்சு அதுபோல ஒரு உயிர்சேதம் ஏற்படும். கண் நோய் வரும், வைரஸ் காய்ச்சல் வரும் கருப்பசாமி காப்பாத்திக் கொடுக்கிறேன். விலைமதிக்கக் கூடிய சிலைகள் கண்டெடுக்கப்படும், தங்கம் விலை குறையும், கும்பாபிசேகங்கள் அதிகம் நடக்கும், ஒரு அரசியல் குடும்பம் தடுமாறும், டாக்டர் எக்சாம்ல மதிப்பெண்ல குழப்பம் ஏற்படும். கவர்மெண்ட் வேலை நிறைய கிடைக்கும் 16 கலெக்டர்கள் பாசாவாங்க. நகைக்கடன் தள்ளுபடி வரும். மழை கம்மியாவும், இடி காற்று அதிகமாவும் இருக்கும்" என்று நாட்டுக்கான அருள்வாக்கு சொல்லி முடித்தார்.

தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.கருப்பசாமி கோயில் பூசாரி நாட்டுக்கான அருள்வாக்கு சொன்னது எப்படி நடக்குமோ என்ற குழப்பத்துடன் சென்றனர் பக்தர்கள்.

The website encountered an unexpected error. Please try again later.