ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த செம்புளிசாம்பாளையம், கிழக்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன்(48). டிராக்டர் ஓட்டுநராக உள்ளார். இவருக்கு செம்புளிசாம்பாளையம் பகுதியில் கிழங்கு தோட்டம் உள்ளது. அங்கு தற்போது நிலக்கடலை பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று(12.9.2024) இரவு முத்தையன் தனது டிராக்டரில் அதைப் பகுதியைச் சேர்ந்த மாரி மாயி (54), செல்வி (50) ஆகிய பெண்களை அழைத்துக் கொண்டு தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையை பறிக்க அழைத்துச் சென்றார். நிலக்கடலையைப் பறித்துக் கொண்டு மீண்டும் முத்தையன் டிராக்டரில் மாரிமாயி, செல்வி ஆகியோருடன் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
செம்புளிசாம்பாளையம் அருகே வந்தபோது சாலையின் அருகே இருந்த மண் திட்டில் டிராக்டர் வாகனத்தின் முன்புற சக்கரமானது ஏறியதில் வாகனத்தின் முன்புற சக்கரமானது மேல் நோக்கி தூக்கி உள்ளது. இதில் நிலை தடுமாறி முத்தையன், மாரிமாயி, செல்வி ஆகியோர் டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். மூவரையும் செம்புளிசாம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிய மாரிமாயி என்பவரை மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே மாரிமாயி இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. விபத்தில் காயம் அடைந்த முத்தையன், செல்வி ஆகியோர் செம்புளிசாம்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.