
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினர். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன், ஒரு மகள் என 3 குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவரான வெங்கடேசன் மாதத்திற்கு 2 அல்லது 3 முறை வீட்டிற்கு வந்து பிள்ளைகள் மற்றும் மனைவியை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். இவருடைய மனைவி அனிதா குள்ளஞ்சாவடி அருகேயுள்ள தனது சொந்த ஊரான தோப்புக்கொல்லை கிராமத்திற்கு கூலி வேலைக்கு தினமும் பேருந்தில் சென்று வருவார்.
அதேசமயம் வெங்கடேசனின் நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான சண்முகம் (45) என்பவர் வெங்கடேசன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இதனால் சண்முகத்திற்கும், வெங்கடேசனின் மனைவியான அனிதாவிற்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அனிதாவை தினமும் தனது ஆட்டோவில் அழைத்து சென்று வந்துள்ளார். அவ்வப்போது இருவரும் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். ஒருமுறை இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் பின்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தோப்புக்கொல்லை கிராமத்திற்கு சென்று 6 மாத காலமாக அந்த கிராமத்தில் வசித்து வந்தனர்.
இருப்பினும் சண்முகமும் அனிதாவும் போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த விஷயம் கணவர் வெங்கடேசனுக்கு தெரிய வரவே இவர்களின் சந்திப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேசனை கொலை செய்ய திட்டமிட்ட சண்முகம், மதுவில் விஷ மருந்தை கலந்து அனிதாவிடம் கொடுத்துள்ளார். அதனை அனிதா கணவரிடம் கொடுத்துள்ளார். அதில் விஷம் கலந்து இருப்பது தெரியாமல் வெங்கடேசன் மனைவி கொடுத்த மதுவை வாங்கி வீட்டில் வைத்து குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் வெங்கடேசன் மயக்கமடையவே அவரை அருகில் உள்ள குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உறவினர்களுக்கு சந்தேகம் எழவே குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் உறவினரான கந்தன் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அனிதா மற்றும் சண்முகம் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் மதுவில் விஷம் கலந்து வெங்கடேசனை கொலை செய்ய திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டனர். அதையடுத்து குள்ளஞ்சாவடி போலீசார் அனிதா மற்றும் சண்முகம் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் பண்ருட்டி அடுத்த தட்டாஞ்சாவடி காந்திநகரை சேர்ந்த சக்திவேல் (வயது 28) என்பவருக்கும் அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்த, கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட உறவால் அந்த பெண்ணை ஏற்கனவே காதலித்து வந்த பண்ருட்டி களத்துமேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுமன் என்பவர் ஆத்திரமடைந்தார்.
கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி அதிகாலை காளியம்மன் கோவில் பின்புறத்தில் சக்திவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். சக்திவேல் கொலை வழக்கு தொடர்பாக புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சுமன் மற்றும் அவரது நண்பர்கள் வசந்தகுமார், குணா ஆகிய மூவரையும் கைது செய்த நிலையில் அந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சில குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொக்குபாளையம் கெடிலம் ஆற்றில் சந்தேகப்படும்படி சிலர் பதுங்கி இருப்பதாக நேற்று கிடைத்த தகவலின் பெயரில் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பண்ருட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன்கள் மணிகண்டன்(23), மகேஷ்(21) கொக்குபாளையத்தை சேர்ந்த அசோக் மகன் ஆட்டோ டிரைவர் அஜித்(23) என்பதும் சக்திவேல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.