Within 80 days at least half of the ministry from DMK will go to jail says H. Raja

தமிழகத்தில், பா.ஜ., கட்சி மீது, போலீசாரைக் கொண்டு, தி.மு.க., திட்டமிட்ட பழி வாங்கும் போக்கை கடைபிடிக்கிறது. அரசியல் ரீதியாக ஹிந்து விரோத அரசாகத் தான் செயல்படுகின்றனர் என பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக அரசும், போலீசும் அரசியல் பாரபட்ச நடவடிக்கையைக் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நிறுத்த வைப்போம். பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து, பா.ஜ., கட்சி போராட வேண்டியிருக்கும். தேசிய கட்சியான பா.ஜ.,வுக்கு கூட்டணி பற்றி ஒரு வழிமுறை உள்ளது. அகில இந்திய தலைமை தான், அதை பற்றி முடிவு செய்யும். இந்த நடிகர் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., ஆனாரா? அந்த நடிகர் அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., ஆனாரா? என்றெல்லாம் கேட்டு, அதற்கு நான் ஏதாவது சொல்லி, அது வைரலாக்க வேண்டாம். அரசியல் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய், அரசியல் நிலைப்பாடு எடுத்து, கருத்து சொல்லும் போது தான், சரியா, தவறா என்று அதைப் பற்றி சொல்ல முடியும்.

என்னுடைய கணிப்பு, வரும் 80 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சராவது சிறைக்கு போவார்கள். அப்போது, அவர் சொல்லும் கருத்தை வைத்து, பேசிக் கொள்ளலாம். அரசியலை பொருத்தவரை, இவருக்கு ஓட்டுப் போடுங்கள், என்று எப்படி மறைமுகமாக சொல்ல முடியும்; அப்படி சொல்ல முடியாது. புள்ளி வச்ச கூட்டணியில், ஒரு அங்கம் தானே மம்தா பேனர்ஜி. அதில் உள்ள முக்கிய புள்ளி, காங்கிரஸ் கட்சியால் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது, என்று சொல்லி இருக்கிறார். லோக்சபா தேர்தலில், பா.ஜ.கட்சி 400 ப்ளஸ் தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெரும். ஒன்பது முறை முதல்வரான நிதிஷ்குமார், பெரும்பாலான காலகட்டத்தில், லல்லுவின் ‘ஜங்கல் ராஜ்’க்கு எதிராகத் தான் அரசியல் செய்திருக்கிறார்.

Advertisment

நாம் தமிழர் கட்சியினரிடம் சோதனை நடத்தியதில், துப்பாக்கி, வெடி பொருட்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறுகின்றனர். இது ஆபத்தான விஷயம். அதனால், அது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கு எதிராக பயன்படுத்த ஆயுதம் சேகரித்தனர், என்று தெரிய வேண்டியது அவசியம். சட்ட விரோத நடவடிக்கை எண்ணம் இல்லாமல், ஆயுதங்கள் சேகரிக்க மாட்டார்கள். அடிப்படை ஆதாரம் இல்லாமல், என்.ஐ.ஏ., சோதனை நடத்தாது.

தமிழக அரசியலில் வளரும் சக்தி பா.ஜ.கட்சி மட்டுமே. எதிர்காலத்தில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். ஊழலும், உளறலும் மிகுந்திருப்பதால், தி.மு.க., அழியும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில், கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் மக்களை திரட்டுவதற்கு, பா.ஜ.கட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அரசியலில் பல்வேறு விதமான கணக்குகள் இருக்கிறது. தே.மு.தி.க.,வை பொருத்தவரை, அ.தி.மு.க., பக்கம் போனதாக உறுதியான தகவல் வரவில்லை. அரசியலமைப்பு சட்டப்படி, மாநிலங்களில் கவர்னர் பதவி இருக்கும். முடிவு எடுக்கும் இடத்தில் இல்லாத விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

Advertisment

தமிழகத்தில், சமீப காலமாக போதைப் பொருட்கள் அதிகம் புழக்கத்துக்கு காரணம், நம் நாட்டுக்கு வெளியே பயங்கரவாத அமைப்புகளை கட்டமைக்க விரும்புவதாக செய்தி வந்துள்ளது. மிகக் குறைந்த அளவில் தான் போதை பொருட்கள் பிடிபடுகின்றன. அதற்கு, தேச விரோத நடவடிக்கைகள் கட்டமைப்படுவதே காரணம். நாம் தமிழர் மீதான நடவடிக்கை கூட அது தொடர்பானது தான்” இவ்வாறு, அவர் தெரிவித்தார்.