சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி காரைக்காலிலும் இரண்டு நாட்களுக்கு மிக மழை பெய்யலாம். நாகை மாவட்டத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழை தொடரும்" எனத் தெரிவித்தவர், சென்னையில் அதி கனமழை பெய்யும் என்பதைக் கவனிக்கத் தவறியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றுதான் மழை பெய்யும் என எதிர்பார்த்தோம். இன்று மிக கனமழை பெய்யும் என கணித்திருந்த நிலையில் நேற்றே மழை பெய்யத் தொடங்கி விட்டது. கடலில் இருக்கும் என கணிக்கப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, நிலப்பகுதிக்கு திடீரென நகர்ந்ததே அதிகனமழைக்கு காரணம். அதி கனமழையைக் கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. கணிப்புகளையும் தாண்டி காற்றின் நகர்வு மற்றும் வேகத்தால் மழையின் அளவு மாறுப்படக்கூடும். சென்னையில் பெய்த அதிகனமழைக்கு மேக வெடிப்பு காரணமல்ல; வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே.
மேக வெடிப்பினால் மழை பெய்தால் அதிக நேரம் மழை பெய்யாது; ஆனால் நேற்று தொடர்ச்சியாக மழை பெய்தது. மழை பெய்வதைத் துல்லியமாகக் கணிக்க ரேடார் உள்ளிட்ட அதி நவீன உபகரணங்கள் சென்னைக்கு தேவை. வானிலையைக் கணிக்க மேலும் பல இடங்களில் ரேடார்களைப் பொருத்த வேண்டியது அவசியம்; நவீன கருவிகளும் தேவை. புதிய உபகரணங்கள் வாங்க அனுமதி கொடுத்துள்ளதால் இனி துல்லியமாக கணிக்க வாய்ப்புள்ளது" என்றார்.