Skip to main content

‘பணத்திற்கு யார் பொறுப்பு!’ ஒரு வாரமாக சாலை ஓரம் நின்ற லாரிகள்! 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

‘Who is responsible for the money!’ Trucks parked on the side of the road for a week!

 

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், சத்திரம், வெங்கடாம்பேட்டை, அப்பியம்பேட்டை, பத்திரக்கோட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், குள்ளஞ்சாவடி அடுத்த சத்திரம், பாச்சாரப்பாளையம், கோரணபட்டு, அப்பியம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த  ஒரு வாரத்திற்கு முன்பு அப்பியம்பேட்டை கண்ணன், சத்திரம் காசிராஜன் ஆகியோர் பன்னீர் கரும்புகள் கொள்முதல் செய்தனர். அதில் வெங்கட்டாம்பேட்டை பொன்னுரங்கம், வெற்றிவேல், முத்துக்குமரன், செந்தாமரைக்கண்ணன், பாச்சாரப்பாளையம் பரமசிவம், செஞ்சிவேல், கோரணப்பட்டு கனகராஜ், அப்பியம்பேட்டை கணபதி உள்ளிட்ட 9 விவசாயிகளிடம் ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான 14 லாரி பன்னீர் கரும்பை வெட்டி ஏற்றியுள்ளனர். அவைகளுக்கு பணம் கேட்டதற்கு, கரும்பை எடுத்து சென்று விட்டு, பின்னர் வந்து பணம் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு கரும்பு விவசாயிகள் 'பணம் கொடுத்த பின்பு, கரும்பு ஏற்றிய லாரி எடுத்துச் செல்லுங்கள்' என சொல்லியுள்ளனர். மாலை பணத்துடன் வருவதாக சென்ற கண்ணன் ஏழு நாட்களாக வரவில்லை.

 

‘Who is responsible for the money!’ Trucks parked on the side of the road for a week!

 

இதனால் ஏற்றிய கரும்பை எங்கு எடுத்துச் செல்வது?, யாரிடம் கொண்டு சேர்ப்பது? என தெரியாமல் ஓட்டுனர்கள் தவித்தனர். இதனால் லாரிகளை சத்திரம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைத்தனர். மேலும் கரும்புக்கு முன்பணம் மட்டும் வாங்கிய விவசாயிகள் வியாபாரிகளிடம் கேட்டதற்கு சரியான பதில் கூறாமல் காலம் தாழ்த்தினர். இதனால் விவசாயிகள் மற்றும் லாரி டிரைவர்கள் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் தெரிவித்தனர்.

 

இதுபற்றி தகவலறிந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாஹீர்,  நெய்வேலி டி.எஸ்.பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் கரும்பு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விஜயதாரணி என்ற பெண் விவசாயிக்கு முழு தொகையும் அளிக்கப்பட்டது. மற்ற விவசாயிகளுக்கு வரும் 20ஆம் தேதிக்குள் உரிய தொகை முழுவதும் செலுத்தி விடுவதாக வியாபாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடலூர் மாவட்டத்திலிருந்து சென்னை மக்களுக்கு படகு, உணவு, உடைகள் அனுப்பி வைப்பு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Sending boat, food and clothes from Cuddalore district to Chennai people

 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக உருவான மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையையொட்டி வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

தமிழக அரசு இயல்புநிலை திரும்ப பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதி 1081 கிலோ கிராம் பால்பவுடர், 21,550 பிரெட் பாக்கெட்டுகளும், 16,784 ரொட்டி பாக்கெட்டுகளும், 33,508 குடிநீர் பாட்டில்களும், 150 ஜாம் மற்றும் பண் பாக்கெட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், போர்வைகள் மற்றும் துணிமனிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீரை வெளியேற்றுவதற்கு 10 எச் பி மோட்டார் இன்ஜின் 10ம், ஒரு 40 எச்பி மோட்டார் இன்ஜினும் மேலும் மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர், இன்ஜின் இயக்குபவர் என 10 பணியாளர்கள் நீரை அகற்றும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 190 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திலிருந்து நான்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

 

 

Next Story

காதல் பிரச்சனை? - கொலை செய்து உடலில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Youth passed away due to love problems

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையபெருமாள். இவரது மகன் மகிழன்(17 - பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி  காலை வீட்டை விட்டு வெளியில் சென்ற மகிழன் இரவு வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து அவரது தந்தை இளையபெருமாள், மகன் காணவில்லை என்று 3 ஆம் தேதி சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். 

 

இந்த நிலையில் பேரூர் அருகே உள்ள குறிஞ்சிகுடி கிராமத்தில் உள்ள பாஸ்கர் என்பவரது கிணற்றுக்கு அருகே மகிழனின் செல்போன் கிடந்துள்ளது. இதனைக் கைப்பற்றிய போலீஸார், விசாரணை செய்து கொண்டிருந்தபோது கிணற்றில் ஒரு பொருள் கிடப்பதுபோல தெரிந்துள்ளது. போலீஸார் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்தபோது ஒரு உடல் கழுத்தில் வெட்டப்பட்ட நிலையில் கல்லைக் கட்டிப் போட்டிருப்பதும் தெரிய வந்தது. 

 

உடலைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்து வந்து பார்த்தபோது அது மகிழன் என்பது தெரிய வந்தது. போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம்  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி ரூபன் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காதல் பிரச்சனையால் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இதுகுறித்து தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.