
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச்சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள்தங்களது டிக்கெட் நகலைப் பகிரவும்,குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் போலீசார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இசை நிகழ்ச்சிக்கு அனுபவம் இல்லாத தன்னார்வலர்களை நிறுவனம் சேர்த்துள்ளதும், அவர்களுக்குபோதிய பயிற்சி வழங்காததும் குளறுபடிக்குக்காரணம் எனவும் தெரியவந்துள்ளது. 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், கடந்த முறை ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிமழையால் ஒத்திவைக்கப்பட்டது. நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பாதி பேர் டிக்கெட்டுகளை ரத்து செய்தனர். இந்நிலையில் தற்போது நடந்த இசை நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது.இது தொடர்பான உரிய விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்திற்கு தாம்பரம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)