Skip to main content

‘பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியது என்ன?’ - தமிழக முதல்வர் விளக்கம்!

Published on 27/09/2024 | Edited on 27/09/2024
'What did Prime Minister Modi insist on?' - Tamil Nadu Chief Minister's explanation

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று (27.09.2024) சந்தித்துப்பேசினார். அப்போது அவர், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தைச் செயல்படுத்திடத் தேவையான மத்திய அரசின் நிதியை வழங்க வேண்டும். சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு  காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக நேற்று டெல்லிக்கு வந்தேன். இன்றைக்கு காலையில் பிரதமரைசந்தித்தேன். இந்த சந்திப்பு, இனிய சந்திப்பாக அமைந்தது. பிரதமர் எங்களிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பு பயனுள்ள சந்திப்பாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று மூன்று முக்கியமான கோரிக்கைகளை நான் அவரிடத்தில் வலியுறுத்தி இருக்கிறேன். தலைப்புச் செய்திகளாக நான் சொன்னாலும், அதனுடைய சாரம்சம் முழுமையாக, தெளிவாக எங்களுடைய கோரிக்கைகளை எழுதி அவரிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம்.

'What did Prime Minister Modi insist on?' - Tamil Nadu Chief Minister's explanation

தலைப்புச் செய்திகளாக நானும் உங்களிடத்தில் சொல்ல விரும்புவது, முதலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே, இரண்டாவது கட்டப் பணிகளையும் செயல்படுத்தவேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு. இந்த இரண்டாவது கட்டப் பணிகள் காலதாமதமின்றி மேற்கொள்வதற்காக, 2019ஆம் ஆண்டு, மாநில அரசின் நிதியிலிருந்தும், கடன் பெற்று பணிகளை துவக்கி, பின்பு மத்திய அரசோடு இணைந்து செயல்படுத்தும் திட்டமாக செயல்படுத்துவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இதனை ஏற்றுக்கொண்டு, 2020-ஆம் ஆண்டில் இதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர், இதற்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும் என்று 2021-2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தார். இதை தொடர்ந்து, மத்திய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் இதற்கான ஒப்புதலை, 2021ஆம் ஆண்டே வழங்கியது. இந்தப் பணிகளுக்கு, இதுவரை 18 ஆயிரத்து 564 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்தாலும், இதுவரைக்கும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால், இதற்கான மத்திய அரசின் நிதி, தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை. இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, தாமதமின்றி இந்த நிதியை உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன்.

'What did Prime Minister Modi insist on?' - Tamil Nadu Chief Minister's explanation

இரண்டாவதாக, மத்திய அரசு 60 விழுக்காடு நிதியையும், தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு நிதியையும் அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ், இந்த நிதியாண்டில் மத்திய அரசு வழங்க வேண்டியது 2 ஆயிரத்து152 கோடி ரூபாய். இந்தத் தொகையில், முதல் தவணை இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. இந்தத் திட்டத்தின்கீழ் கையெழுத்திடப்பட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததே இதற்கு காரணம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை, ஏற்கனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்திருக்கிறது. செயல்படுத்திக் கொண்டும் வருகிறது. காலை உணவு திட்டம் போல, மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படாத பல முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால், தேசியக் கல்விக் குழுவின் ஒரு விதிமுறையான மும்மொழிக் கொள்கையை பின்பற்ற தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை.

எந்த ஒரு மாநிலத்தின் மீதும், மொழித் திணிப்பு இருக்காது என்று தேசிய கல்விக் கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதற்கான ஷரத்து இல்லை. எனவே, இந்த ஒப்பந்தம் திருத்தப்படவேண்டும் என்று மத்திய அரசிடம் சொல்லிக் கொண்டு வருகிறோம். இந்தச் சூழ்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத காரணம் காட்டி, மத்திய அரசு நிதியை விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்ற சூழல் உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம். உடனடியாக இந்தத் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி அளிக்கப்படவேண்டும் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறோம்.

'What did Prime Minister Modi insist on?' - Tamil Nadu Chief Minister's explanation

மூன்றாவதாக, தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறோம். விரிவாக (Detail) சொல்லியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், மீன் பிடிக்கப் போகும் நம்முடைய மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து துன்புறுத்துகிறார்கள். இதுபற்றி பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நான் பலமுறை வலியுறுத்தியும், கடிதம் எழுதியும், இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் மிக அதிக அளவு எண்ணிக்கையில், இதுமாதிரியான சம்பவங்கள் நடக்கிறது. 191 மீன்பிடிப் படகுகளும், 145 மீனவர்களும் தற்போது இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, உடனடியாக நம்முடைய மத்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி, இந்த மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடிப் படகுகளையும் மீன்பிடிக் கருவிகளையும் உடனடியாக விடுவித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அடுத்த மாதம் கொழும்பில் நடைபெற இருக்கும், இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டுக்குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். இலங்கையில், புதிய அரசு அமைந்திருக்கிறது. புதிய அதிபரிடம் இந்தக் கோரிக்கையை இந்திய மத்திய அரசு வைக்கவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். கவனமாக இந்த மூன்று முக்கிய கோரிக்கைகளையும் கேட்டுக்கொண்ட பிரதமர், இதுபற்றி விரைவாக கலந்தாலோசித்து முடிவுகளை தெரிவிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க தேவையான இந்த முக்கிய கோரிக்கைகளை பிரதமர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டிற்கு ஏராளமான கோரிக்கைகள் இருக்கிறது. அதையெல்லாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தொடர்ந்து வலியுறுத்தப் போகிறோம். இந்த மூன்று கோரிக்கைகளை மையப்படுத்தித்தான் இந்த சந்திப்பு நடைபெற்றது என்பதை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்