Skip to main content

“அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்” - அமைச்சர் துரைமுருகன்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

What Annamalai says is a lie filtered through Jamakalam  Minister Duraimurugan

 

அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.9.2023) வெளிவந்த தனியார் நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அதில் ‘தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது’ என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை திமுக மீது சுமத்தி இருக்கிறார். நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளைப் பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு. பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை சொல்வது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்.

 

நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடானா அணை, இராமநதி அணை, பாலாறு - பொருந்தலாறு அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை, பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோயில் அணை, குப்பநத்தம் அணை, இருக்கன்குடி அணை, செண்பகத்தோப்பு அணை, நங்காஞ்சியார் அணை, நல்லதங்காள் ஓடை அணை,  மிருகண்டாநதி அணை, வரதாமநதி அணை,  வரட்டாறு வள்ளிமதுரை அணை இப்படி 40க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. ஆனால், அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். இது என்னுடைய நீண்டகால அனுபவத்தில் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வாணமாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ் திரையுலகம் நடத்தும் ‘கலைஞர் 100’ விழா தள்ளிவைப்பு

kalaignar 100 event postponed

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் இந்தாண்டு முழுவதும் கொண்டாடத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதுபோன்று இதுவரை நடந்த நிகழ்வில் ஜெயம் ரவி, வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். 

இதனிடையே தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடர்ச்சியாகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சங்கம், பெப்சியில் உள்ள 24 சங்கங்களும் கலந்துகொண்டு வருகிறார்கள். 

இதையடுத்து திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், இந்த நிகழ்ச்சி வருகிற 24ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவித்தனர். மேலும் டிசம்பர் 23 மற்றும் 24 அன்று இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறாது என தெரிவிக்கபட்டது. மேலும் ரஜினி, கமலை தொடர்ந்து விஜய், அஜித்திற்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாக கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில் கலைஞர் 100 விழா தள்ளிப் போகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள். மேலும், முதல்வரும் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். இவைகளை கருத்தில் கொண்டு 24.12.2023 அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா 06.01.2024 சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல” - கமல்ஹாசன்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
kamalhassan said This is not the time to blame the government for the Chennai floods

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக சிலர் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இது அரசை குறைகூறும் நேரமல்ல என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களுக்கு என்ன செய்வது என்பது மட்டுமே உடனடியாக செய்ய வேண்டும் அரசை குறைகூறும் நேரம் இதுவல்ல. ஆனால் அரசை விமர்சிக்க கூடாது என்று கூறவில்லை. பேரிடர்கள் என்பது யாராலும் கணிக்க முடியாது; மக்களுக்கு நீண்ட கால தீர்வை கொடுக்க வேண்டும்; அதற்கான நடவடிக்கை தேவை. நாம் எதிர்பார்த்ததை விட இந்த முறை அதிக மழை பெய்ததால் நமக்கு பாதுகாப்பு குறைவாக தோன்றுகிறது. அரசு இயந்திரம் ஒரு கோடி மக்களை உடனே சென்றடைவது என்பது சாத்தியமில்லை. அதனால் நாம் நமக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். மக்கள் நீதிமய்யம் சார்பாக மருத்துவ முகாம் இன்று நடத்தப்படுவதாக இருந்தது; ஆனால் இனிமேல்தான் மக்களுக்கு நோய் தொற்று அதிகரிக்கும் என்பதால், நாளை முதல் நடத்தப்படும்” என்றார்.