மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் விவசாய கூலி வேலை செய்வதற்காகக் கடந்த 10ஆம் தேதி ரயில் மூலம் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி சென்னை வந்தவர்கள் இடைத்தரகர்கள் மூலம் சென்னை அடுத்துள்ள பொன்னேரி பகுதியில் தங்கி மூன்று நாட்கள் வேலை செய்தனர். இருப்பினும் தொடர்ந்து வேலை கிடைக்காததால் மீண்டும் சொந்த ஊரான மேற்கு வங்கம் செல்ல முடிவெடுத்தது கடந்த 13ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அதே சமயம் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை என 4 நாட்கள் உணவின்றி பட்டினி கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் கடந்த 16ஆம் தேதி சமர்கான் (வயது 35), மாணிக்கோரி (வயது 50), சத்யா பண்டிட் (வயது 33), ஆசித் பண்டிட் (வயது 35) மற்றும் கோணா ஸ்மித் (வயது 52) என 5 பேர் பசி மயக்கத்தில் இருந்த நிலையில் மீட்கப்பட்டு ரயில்வே போலீசார் மூலம் அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மாணிக்கோரி, ஆசித் பண்டிட், கோணா ஸ்மித் ஆகிய மூன்று பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மேற்கு வங்க அரசின் உதவியின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சத்யா பண்டிட், சமர்கான் ஆகிய இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சமர்கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பசியால் உடல் உள்ளுறுப்புகள் செயலிழந்து சமர்கான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க தொழிலாளி ஒருவர் சென்னையில் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.