Skip to main content

ரஜினியின் அரசியல் கட்சியை வரவேற்கிறோம்....! த.மா.கா. யுவராஜா!

 

Welcome to Rajini's political party ....! - tmc Yuvaraja!

 

தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணிக் கூட்டம் ஈரோட்டில் 23-ஆம் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட மாநில இளைஞர் அணித் தலைவர் எம்.யுவராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறும்போது,

 

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு தமிழ் மாநிலக் காங்கிரஸ் தயாராக உள்ளது. தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை இளைஞர் அணி மூலம் நடத்த இருக்கிறோம். தூத்துக்குடியில் தொடங்கும் இந்தக் கூட்டம் மாநிலம் முழுவதும் ஜனவரி மாதம் வரை நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற அளவில் இளைஞர் அணி (10 குழுக்கள்) அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடனான ஆலோசனையில் 'பூத்' குழுக்கள் அமைத்து தேர்தல் பணியைத் தொடங்குவது குறித்து அறிவுரைகள் வழங்கப்படும்.

 

ஜனவரி மாதத்தில் ஈரோடு மற்றும் சென்னையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மாநில இளைஞர் அணி கூட்டங்கள் நடைபெறும். த.மா.கா. தலைவர் ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளபடி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் த.மா.கா. உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியே ஆட்சி அமைப்பார். அ.தி.மு.க.வின் வெற்றிக்கு த.மா.கா. பணியாற்றும்.

 

சென்ற நான்கு ஆண்டுகளாக தி.மு.க, ஆளும் அ.தி.மு.க. மீது குற்றச்சாட்டுகள் வைத்துள்ளது. பொய்யான பிரச்சாரங்களைத் தொடர்ந்து வைத்து வருகிறது. நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, விவசாயிகள் பிரச்சினைகளில் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை தி.மு.க. செய்கிறது. கரோனாவைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.வி.வின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்பாததால், தற்போது அ.தி.மு.க. மீது ஊழல் புகாரை கவர்னரிடம் கொடுத்துள்ளனர். ஊழலைக்குறித்து பேச தி.மு.க.வுக்கு எந்தத் தகுதியும் இல்லை. ஊழலின் ஊற்றுக்கண் என்றால் அது தி.மு.க.தான்.

 

தமிழகத்தில் பொங்கல் பரிசான ரூபாய் 2,500 வழங்குவதை ஊழல் என்றும், மினி கிளினிக் அமைப்பதை ஊழல் என்றும் தி.மு.க. தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால் அவர்கள் மீண்டும் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தான் சந்திப்பார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார்கள். தி.மு.க. அல்ல எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது. எனவேதான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மூலம் ஏழை அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றியுள்ளார்.

 

விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு பேசித்தீர்க்க வேண்டும் என்று ஏற்கனவே த.மா.கா. தலைவர் அறிவுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி 3 மாதங்கள் ஆகிறது. தமிழகத்தில் எந்த விவசாயியும், விவசாயச் சங்கங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், பஞ்சாப் அரியானாவில் மண்டி அதிபர்களுக்கு பாதிப்பு என்பதால், அவர்கள் பணம் கொடுத்து விவசாயிகளின் பின்னணியில் இருந்து போராட்டம் நடத்துகிறார்கள். தமிழகத்தில் நல்ல மழைபெய்து, மகசூல் நன்றாக இருக்கும் நிலையில் விவசாயிகளைக் குழப்பும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சினையை தி.மு.க. கூட்டணி அரசியல் ஆக்க வேண்டாம்.

 

ரஜினிகாந்த் அரசியல் கட்சித் தொடங்கினால் தி.மு.க.வுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படும். ஆனால், தி.மு.க.வினரோ அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு என்பதுபோல் பேசி வருகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். மத்திய அரசு வேலைவாய்ப்புக்காக ஒதுக்கி உள்ள ரூ.27 ஆயிரம் கோடியில் தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஒட்டு போடலாம் என்கிற தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்கிறோம்.

 

போக்குவரத்துத் துறை, ரயில்வேத் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகளை தனியார் மயம் ஆக்குவதை எதிர்க்கிறோம். மின்சாரத்துறை தனியாருக்குக் கொடுக்கப்பட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். கரோனா பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீண்டுவரும் நிலையில் மின்சாரத்துறையைத் தனியார் துறை ஆக்குவது நல்லதல்ல. இதுபோல் மின்இணைப்புக்காகக் கூடுதல் வைப்புத்தொகை கேட்பதும் சரியல்ல என்றார்.