hjk

சிவகாசி நண்பரொருவர் “இன்று (22-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமைதானே.. திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்குப் போவோமே.. அது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்..” என்று அழைத்தார். உடன் சென்றோம். ‘பாரெங்கும் முழங்கட்டும் தமிழிசை’ என்ற வாசகம் தாங்கிய வரவேற்பு பேனரைக் கடந்து உள்ளே சென்றோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாதிரியே தெரியவில்லை. அங்கங்கே ஸ்டால்கள் போட்டிருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், ஒவ்வொரு ஸ்டாலிலும் நின்று கொடுத்ததை வாங்கிச் சாப்பிட்டனர். ‘நீரிழிவுக்கு துவர்ப்பாகச் சாப்பிடுங்கள்’ எனத் தென்னங்குருத்தைச் சீவிக் கொடுத்தனர்.

Advertisment

நறுக்கப்பட்ட பப்பாளிப் பழம் மற்றும் தர்பூசணித் துண்டுகள், அன்னாசிப் பழச் சீவல்கள், அத்திப்பழங்கள், கொழுக்கட்டைகள், மண் குவளையில் மழை நீர், சாத்துக்குடிச்சாறு என விதவிதமாகத் தந்தனர். நர்சரி செடி, மரக்கன்றுகள் எனக் கொடுத்தபடியே இருந்தனர். மணமகனின் தந்தை மாறன்-ஜி என்பவர், தாய்வழி இயற்கை உணவகம் மற்றும் இயற்கை வாழ்வியல் இயக்கத்தை நடத்துபவராம். சிவகாசி சிரிப்பு மன்றமும் கைகோர்த்து, இத்தனை ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றனர். இயற்கை உணவுகள் இத்தனையையும் சாப்பிட்ட பலருக்கும், அங்கு ஏற்பாடு செய்திருந்த இரவுச் சிற்றுண்டியைச் சாப்பிடுவதற்கு வயிற்றில் இடம் இல்லாமல் போனது. மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு திரும்பியவர்களின் கையில் துணிப்பை ஒன்றினைத் தந்தனர்.

Advertisment

jk

அந்தத் துணிப்பையில், நோட்டு புத்தகம், ஆரோக்கிய வாழ்வுக்கான விபரங்களை உள்ளடக்கிய புத்தகம், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதற்கான சாஷே பாக்கெட்டுகள், நெல்லிக்காய், இஞ்சி, சீரகம், இந்துப்பு அடங்கிய நெல்லி சுப்பாரி, நீரில் கண்களைக் கழுவிப் பாதுகாப்பதற்கான குவளை, வெள்ளரிக்காய், வாழைப்பழம், தேங்காய் மற்றும் மூலிகைப் பல்பொடி எனப் பலவும் இருந்தன. ‘பரபரப்பாக இயங்குகிறார்கள் மக்கள். இந்நிகழ்ச்சி வாயிலாக, உடல் நலம் காப்பதில் சிறிதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என யோசித்தோம். இந்த ஏற்பாடுகளைச் செய்தோம்..’ என்றார், அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர். வந்தோமா, சாப்பிட்டோமா, மணமக்களுடன் நின்று போட்டோ எடுத்தோமா, கிளம்பினோமா என்ற அளவிலேயே பெரும்பாலானோர் உள்ள நிலையில், இயற்கை வாழ்வியலையும் ருசித்துத்தான் பாருங்களேன் எனப் பயிற்சிப் பட்டறைபோல், அந்த வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியது, பாராட்டுதலுக்குரிய நற்செயலே!