/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/78_44.jpg)
சென்னை புழுதிவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரகுராம் 39 வயதான இவர் நுங்கம்பாக்கம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நீண்ட நாட்களாக ரகுராமிற்கு திருமணம் ஆகாததால் இவரது பெற்றோர் திருமண தகவல் மையத்தில் இவரது சுய விவரத்தினைப் பதிவு செய்து வைத்திருந்தனர். சில நாட்களில் ஐஸ்வர்யா என்ற பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரப்படம் இவரது கைப்பேசிக்கு வந்துள்ளது.
தொடர்ந்து இருவரும் செல்போன்களில் பேசியுள்ளனர். செல்போன் பேச்சு வெகு நாட்கள் தொடர திடீரென ஒருநாள் ஐஸ்வர்யா தனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி ரகுராமிடம் மருத்துவ செலவிற்கு பணம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரகுராம் 8000 ரூபாய் அனுப்பியுள்ளார். தொடர்ந்து 4 மாதங்களில் பலமுறை ஐஸ்வர்யா இவ்வாறு கேட்க ரகுராம் பணம் அனுப்பிக்கொண்டே இருந்துள்ளார். மேலும் தாயாருக்கு உடல்நிலை சரி இல்லை எனக் கூறி ஐஸ்வர்யா மற்றும் அவரது சித்தப்பா திருமண ஏற்பாடுகளையும் தட்டிக் கழித்துக் கொண்டு வந்துள்ளனர்.
எத்தனை நாள் கழித்து திருமணம் குறித்து கேட்டாலும் தன் அம்மாவின் உடல் நலத்தைக் காரணம் காட்டி மறுத்து வந்துள்ளார். ஐஸ்வர்யா மேலும் மேலும் பணம் வாங்கிக் கொண்டே இருந்ததால் சந்தேகம் அடைந்த ரகுராம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
பணம் திரும்ப கேட்டதும் ரகுராமிடம் பேசிய சித்தப்பா, பணம் கேட்டால் நீங்கள் பேசிய ஆடியோவை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரகுராம் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்ததில் ஐஸ்வர்யா மற்றும் அவரது சித்தப்பா கல்யாணராமன் என செல்போன் எண்களும் சேலம் திருப்பதி அண்ணாமலை நகரைச் சேர்ந்த தாத்தாதிரி என்பவரது பெயரைக் காட்டியது. 49 வயதான தாத்தாத்திரியை தனிப்படை அமைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல்துறையினர் தாத்தாதிரியை விசாரித்ததில் ஐஸ்வர்யா மற்றும் கல்யாணராமன் குரலில் அவரே பேசி ரகுராமை ஏமாற்றியது தெரிய வந்தது. கல்யாணக் கனவுகளுடன் இருந்த ரகுராமிடம் தொடர்ச்சியாய் பணம் பெற்று வந்தது 49 வயது ஆண் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
தாத்தாதிரியை கைது செய்த காவல்துறையினர் அவரை விசாரித்தனர். மேலும் அவரை ரகுராமிடம் பேசிக்காட்டியது போல பேசச்சொல்லி உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)