Skip to main content

'இவர்களையும் அரசின் கண்ணுக்கு காட்டுவோம்'-வைரமுத்து கருத்து! 

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

 'We will show them to the eyes of the government' - Vairamuthu comment!

 

கடந்த 25.10.2021 அன்று டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.

 

உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு பல்வேறு  கலைஞர்கள், பிரபலங்கள் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து விருதுபெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்...

 

 'We will show them to the eyes of the government' - Vairamuthu comment!

 

'பால்கே விருது பெற்றதில்
கலை உலகுக்கே
பெருமை சேர்த்துள்ளார்
நண்பர் ரஜினிகாந்த்.
ஊர்கூடி வாழ்த்துவோம்.

கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று
பால்கே விருதுக்குத் 
தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் 
மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் 
ஒன்றிய அரசின்
கண்களுக்குக் காட்டுவோம்' 

என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்” - நீதிமன்றத்தில் வாதம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ilaiyaraaja copy write issue case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும் பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என மனுதாரர் தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு ஆமாம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதார், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரி தான் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் என்றும், ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா விஷயத்தில் அத்தகைய கூற்றை கூற முடியாது எனவும் கருத்து தெரிவித்தது. இதையடுத்து வாதிட்ட இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “தொடர்ந்து வாதங்களை முன்வைக்க விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.காப்புரிமை விவகாரத்தில் பிறரைவிட எங்கள் தரப்பின் (இளையராஜாவின்) உரிமைதான் மேலானது என்ற வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டது. மற்றபடி இளையாராஜா அமைதியானவர், அடக்கமானவர். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதித்து நடக்கக் கூடியவர்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.