நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.
இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.