தமிழ்நாட்டில் இன்று ஆசிரியர் தின விழா வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடப்பட்டது. அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழாவை மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்யராஜ் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடைகள் அணிவித்து புத்தகங்களை பரிசாக கொடுத்து கொண்டாடியதுடன் ஒரு கருத்தரங்கத்தையும் நடத்தினார்கள்.
புதுக்கோட்டை மாவட்ட நாணயவியல் கழகம் எஸ்.டி.பஷீர் அலி காலை முதல் மதியம் வரை பல நாட்டு நாணயங்கள், பணத் தாள்கள், அஞ்சல் வில்லைகளை கண்காட்சியாக வைத்திருந்தார். காசு பணத்திற்காக எல்லாரும் தேடிப் போகிறார்கள். ஆனால் நாங்கள் பலநாட்டு நாணயங்களையும் ஒரே இடத்தில் காண முடிந்தது என்றனர் மாணவ, மாணவிகள்.
மாலையில் நடந்த ஆசிரியர் தின கருத்தரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் சதாசிவம் மற்றும் அறிவியல் இயக்கம் அறிவொளி கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி மன்றத் தலைவர் ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாணவிகளே தொகுத்து வழங்கினார்கள். மாணவ, மாணவிகளின் நடனம், கலை, இலக்கியம், பேச்சுகளோடு நடந்தது.
மாணவ, மாணவிகள் மத்தியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சதாசிவம் பேசும் போது,
''இன்று ஆசிரியர் தினம் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். விண்ணப்பித்து பெறுவதல்ல நல்லாசிரியர் விருது. தங்களின் நல்ல வேலையை பார்த்து கொடுக்க வேண்டும். இன்று நீங்கள் ஆசிரியர்களை கௌரவித்தது போல மாணவர்கள் ஆசிரியர்களை கௌரவிப்பதே உண்மையான விருது.
உலகில் புனிதமான இடங்கள் இரண்டு. ஒன்று தாயின் கருவறை. நமக்கு உயிர் கொடுக்கும் இடம். மற்றொன்று வகுப்பறை நல்ல அறிவைக் கொடுக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களை பல்வேறு பட்டப் பெயர்களை சொல்லி அழைத்து அவர்களை அவமானப்படுத்தினார்கள். இதையெல்லாம் சகிக்க முடியாத கலைஞர் முதலமைச்சராக இருந்த போது மூன்றாம் பாலினத்தவர்களை கௌரவமாக அழைக்க வேண்டும். அவர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று '2008 ஏப்ரல் 15 திருநங்கையர் தினம்' என்று கலைஞர் அறிவித்தார்.
அன்று முதல் மூன்றாம் பாலினத்தவர்கள் திருநங்கைகளாக அழைக்கப்படுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் என்ற உயர்ந்த பொறுப்பை ஒப்படைத்தார்கள். அதன் மூலம் கடந்த 3 மாதத்தில் 31 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். பொன்னமராவதி பகுதியில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கிறது. குழந்தைகள் திருமணத்தை மாணவ, மாணவிகள் தடுக்க வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் உடனே இலவச தொலைப்பேசி எண் 1098 க்கு சொல்லலாம். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள் ஏற்படும் போது ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் நலக்குழுவிடம் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.
நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.