/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eps-ananisa_0.jpg)
அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் மேல்முறையீட்டிற்கு செல்லும் திட்டம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவிக்கின்றது.
இந்த தீர்ப்பினை குறித்து அறிக்கை வெளியிட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது "உண்மை உறங்கும் நேரம், பொய்மை இறக்கை கட்டி வாயு வேகத்தில் உலாவரும் என்று சொல்லுவார்கள். நம்மையெல்லாம் ஆளாக்கிய கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்.; நம்மையெல்லாம் வாழவைத்த ஜெயலலிதா ஆகியோர் வழியில் அதிமுக தொண்டர்களையும், திமுக அரசிடம் இருந்து தமிழக மக்களையும் காக்கும் அறப்போரில் முழுமனதோடு ஈடுபட்டு வருகிறோம்.
இந்த அரும் பணிகளுக்குத் தடையாக, உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது.
23.6.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்றும், 11.7.2022 அன்று கழக சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு கழகப் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும்,அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் இன்று (2.9.2022) வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
இந்த சட்டப் போராட்டத்தில் என்னோடு துணை நின்ற அனைத்து அதிமுகவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)