Skip to main content

“நிதி வேண்டாம்! நீதிதான் வேண்டும்” - மாணவியின் தாய் வேதனை

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

“We Do not fund! We need Justice” The mother of the student

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாச்சலூர் மலைக் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த ஒன்பது வயது மாணவி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளியின் பின்புறத்தில் உடல் எரிந்த நிலையில் இறந்துகிடந்தார்.

 

இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து, பள்ளியில் பணிபுரிந்துவந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என பல பேரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், மாணவி மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாக போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கோரி மேல்மலை, கீழ்மலைப் பகுதியில் உள்ள பொதுமக்களும் மாணவிக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். 

 

திண்டுக்கலில் நேற்று (22.12.2021) வெள்ளாளர் சங்கம் சார்பாக மாநிலத் தலைவர் ஹரிகரன் மற்றும் மாநில மகளிரணித் தலைவி அன்னலட்சுமி உட்பட மாநில பொறுப்பாளர்களும் மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் கலந்துகொண்டு குற்றவாளியைக் கைது செய்யக் கோரி கண்டன குரல் எழுப்பினார்கள்.

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மாநிலத் தலைவர் ஹரிகரன், “ஒன்பது வயதான மாணவி, சிறுமியை எரித்து கொடூரமாக கொலை செய்து எட்டு நாட்கள் ஆகிறது. அப்படியிருந்தும் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் ஆர்வம் காட்டவில்லை. அதனால்தான் ஆர்ப்பாட்டம் நடத்தினோம் முதலில் மறியலுக்கு அனுமதி கேட்டோம். அதற்குப் போலீசார் அனுமதி தர மறுத்ததால், ஆர்ப்பாட்டம் செய்த பின் மறியலில் ஈடுபட்ட எங்களைப் போலீசார் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றனர். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஒரு பச்ச மண்ணை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க ஆர்வம் காட்டாத போலீசார், அதற்கு நீதி கேட்டுப் போராடிய எங்களைத் தடுப்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மறியலில் ஈடுபட்டோம். இந்த நிலை தொடர்ந்தால் மாநில அளவில் போராட்டம் நடைபெறும்” என்று கூறினார்.

 

இந்தப் பேட்டியின்போது மாணவியின் தந்தை மற்றும் தாய் உடனிருந்தனர். அப்போது தாய், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “என் மகளைக் கொலை செய்த குற்றவாளியைப் போலீசார் பிடித்து தூக்கில் போட வேண்டும். அப்படிப் போட்டால்தான் என் மகளின் ஆத்மா சாந்தி அடையும். அதுபோல் எங்களுக்குத் தமிழ்நாடு அரசு நிதி எல்லாம் வழங்க வேண்டாம்; நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்” என்று கூறினார். இந்நிலையில், தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாணவியின் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நூற்றாண்டு கண்ட சித்தநாதன் பஞ்சாமிர்த கடை இடிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Demolition of century-old Siddhanathan Panchamirtha shop

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி அடிவாரத்தில் உள்ள அண்ணா செட்டிமடம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அடிவாரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகிறது. 120 குடியிருப்புகள் மற்றும் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. படிப்பாதை அருகே நூறாண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பிரசித்தி பெற்ற சித்தநாதன் பஞ்சாமிர்தம் கடையும் இடித்து அகற்றப்பட்டது.

Next Story

மார்பில் கத்தி போட்டவாறு கோவிலுக்கு அழைத்து வந்த பக்தர்கள்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Devotees brought to the temple with knives in their chests

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் உள்ள சின்னாளபட்டி  கீழக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீமது இராமலிங்க  சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில். பழம் பெருமை வாய்ந்த இக்கோவிலின்  பெரிய கும்பிடு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது.  அதன்பின்னர் முகூர்த்தகால் ஊன்றுதல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மாலை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய  விரதம் இருந்து காப்புக்கட்டிக்கொண்ட பக்தர்கள் பாரதிநகர் பிள்ளையார்  கோவிலிலிருந்து பால்குடங்களை சுமந்தவாறு வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம்  செய்தனர். அதன்பின்னர் செவ்வாய்கிழமை அம்மன் கரகம் எடுக்க விரதம் இருந்த  பக்தர்கள் கோவில் முன்பு வந்தனர். அப்போது ஜமீன்தார் அழைப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

ஜமீன்தார் முத்துராஜாவை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மாலை  அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலுக்கு வந்த ஜமீன்தார் அசுவ  வாகனத்தை (குதிரை) தானமாக கொடுக்க ஜமீன்தாருடன் கோவில்  கமிட்டியார்கள், பக்தர்கள் அம்மனை அழைத்து வர பிருந்தாவன தோப்பிற்கு  சென்றனர். அங்கு அம்மன் கரகம் மல்லிகைப்பூ வைத்து அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது அம்மன் கரகம் முன்பு பெண்கள் முளைப்பாரி வைத்து கும்மியடித்தனர். அதனை தொடர்ந்து அம்மன் கரகம் முன்பு கத்தி போடும்  நிகழ்ச்சி நடைபெற்றது.

Devotees brought to the temple with knives in their chests

ஜாதி மான் முதலில் கத்திபோட அதன்பின்னர்  செவ்வலேர் வம்சத்தை சேர்ந்த தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கத்தி  போட்ட பின்பு தேவாங்கர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்கள்  மார்பில் கத்தி போட்டவாறு சௌடம்மா தீசிக்கோ! சௌடம்மா தீசிக்கோ!! சௌடம்மா தீசிக்கோ!!! என சொல்லி இரத்தம் சொட்ட சொட்ட தங்கள் மார்பு மீது  கத்தி போட்டவாறு அம்மனை அழைத்தனர். அதனை தொடர்ந்து ஜமுதாவி  அம்மனை போல் அலங்கரித்த கரகத்தை குதிரை மீது வைத்து அம்மன்  கரகத்துடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அம்மன் கரகம் பிருந்தாவன  தோப்பில் இருந்து புறப்பட்டு கஸ்தூரிபா மருத்துவமனை சாலை, பூஞ்சோலை,  தேவாங்கர் பள்ளி சாலை, பொம்மையசாமி கோவில் தெரு, கடைவீதி வழியாக  கோவிலை வந்தடைந்தது. அசுவ வாகனத்தில் அமர்ந்தவாறு அம்மன்  கோவிலுக்கு வந்தபோது ஓம்சக்தி, பராசக்தி, என்று பக்தர்கள் கோஷமிட்டனர். அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  கோவிலில் சக்திசேர்க்கும் போது தேவாங்கர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வரை தங்கள் மார்பில் கத்தி போட்டு அம்மனை வழிபாடு  செய்தனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கீழக்கோட்டை தேவாங்கர் மகாஜனசபை  நாட்டாமை வழக்கறிஞர் பி.வாசுதேவன், பெத்தனகாரர் எஸ்.முருகன், தலைவர்  ஏ.இராமலிங்கம், செயலாளர் எம்.முருகன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம்,  துணைச்செயலாளர்கள் புவனேந்திரன், இணைபொருளாளர் வி.பெருமாள்,  இணைச்செயலாளர் கே.கனகராஜ், தேவாங்கர் இளைஞர் அணியை சேர்ந்த தலைவர் சி.தேவா, வி.வீரேஸ்குமார், எஸ்.கோபிநாத், இணைத்தலைவர் தினேஷ்  குமார், இணைச்செயலாளர் விமல்குமார், மற்றும் சவடம்மன் கோவில் பூசாரி  ஏ.எஸ்.கனேசன் சாஸ்திரி, துர்கைஅம்மன் கோவில் பூசாரி கே.எம்.முருகன், கரகம் எடுக்கும் பூசாரி கார்த்திக், அஸ்வவாகனத்தில் ஜமுதாடு பெட்டி அழைத்து வரும் ஜாதிப்பிளை எஸ்.சரவணன் தலைமையிலான விழா கமிட்டியார்கள்  சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும்  மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பேருந்து நிலையம் அருகே உள்ள விஜயமஹாலில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்!