ராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை ஒன்றாவது வார்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கவில்லையாம் நகராட்சி. இதுப்பற்றி அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு போன் செய்து குறை சொன்னபோது தண்ணீர் வரும் என பதில் சொன்னார்களாம்.
ஆனால், இப்போது வரை தண்ணீர் வரவில்லையாம். இதனால் அதிருப்தியான அப்பகுதி மக்கள், ராணிப்பேட்டை நகராட்சி அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், ராணிப்பேட்டை காரை பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அரசு அலுவலர் வாடகை குடியிருப்பில் பத்து நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லையாம்.
அவர்களும் நகராட்சியிடம் முறையிட்டும் சரியாக பதில் சொல்லவில்லையாம். பொருத்து, பொருத்து பார்த்த குடியிருப்புவாசிகள் திடீரென டிசம்பர் 12ந்தேதி காலை சாலை மறியல் செய்தனர். இதனால் நீண்ட தூரத்துக்கு பேருந்துகள் நின்றன. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடமும் குடியிருப்புவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் போலீஸார் தான், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்களே தவிர சம்மந்தப்பட்ட நகராட்சி அலுவலர்கள் யாரும் அந்த பக்கம் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.