ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோவும் மலேசியா நாட்டின் பினாங்கும் மாநில துணை முதலமைச்சர் ராமசாமியும் நெருங்கிய நண்பர்கள். விடுதலைப்புலிகள், ஈழம் என்பதில் இருவருக்கும் ஒற்றுமை அதிகம். தமிழ்நாடு வந்தால் வைகோவை சந்திக்காமல் செல்லமாட்டார் ராமசாமி. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த ராமசாமியை மாமல்லபுரம் அழைத்துச் சென்று சிற்பங்களை காட்டினார். தமிழ், வரலாறு, தமிழர் பண்பாடு மீது அதிக பற்றுக் கொண்டவர் ராமசாமி.
கடந்த ஆண்டு மலேசியாவில் துணை முதல்வர் ராமசாமி மகள் திருமணத்திற்க்காக தமிழ்நாட்டில் இருந்து வைகோவுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் வைகோ தனது உதவியாளருடன் சென்றார். ஆனால் விமான நிலையத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்று கூறி ஒரு நாள் முழுக்க காத்திருக்க வைத்து சென்னைக்கே திருப்பி அனுப்பினார்கள். இதனால் ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும், தமிழின உணர்வாளர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மலேசியாவுக்கு வர கூடாது என்றால் ஏன் விசா கொடுத்தார்கள் என்று கேள்விகளை கேட்டார்கள். நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் தண்ணீர் கூட குடிக்காமல் அமைதியாக இருந்தார் வைகோ.
இந்த நிலையில் தற்போது துணை முதல்வர் ராமசாமியின் மகன் திருமணத்திற்காக சென்னையிலிருந்து தனது உதவியாளருடன் மலேசியா சென்றுள்ளார் வைகோ. அவரை தமிழர்கள் பலர் வரவேற்றனர். தொடர்ந்து மலேசிய விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கியோங் வைகோவை சமாதானம் செய்யும் விதமாக குடிதண்ணீர் கொடுத்து கடந்த முறை நடந்த நிகழ்வுக்காக வருத்தம் தெரிவித்தார். அதனால் வைகோவும் சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து மலேசிய நண்பர்களுடன் பத்துமலை முருகன் கோயிலுக்கு சென்றார். இந்த முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்ல முறையில் உபசரித்து வைகோவை தமிழகம் அனுப்ப வேண்டும் என்று துணை முதல்வர் ராமசாமி குடும்பத்தினரும், நண்பர்களும் வைகோவுக்கு உபசரிப்புகளை செய்து வருகின்றனர். மேலும் திருமண விழாவில் கலந்து கொள்ளும் போதும், செய்தியாளர்கள் சந்திப்பு இருந்தாலும் விடுதலைப்புலிகள் பற்றி பேசிவிட வேண்டாம் என்று பலர் கூறி வருகின்றனராம்.