Skip to main content

தாயின் கண்ணை தானம் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

visually impaired person who donated his mother eye

 

35 ஆண்டுகளாக வெளிச்சத்தையே பார்க்காத பார்வையற்ற மாற்றுத் திறனாளி தனது தாயாரின் கண்களைத் தானமாகக் கொடுத்து பார்வையற்றவர்களுக்கு ஒளியும், வழியும் ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம்  அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அடுத்துள்ள கிராமம் மேலக்குறிச்சி. அங்குள்ள காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் அஞ்சலையம்மாள் தம்பதியினரின் மகன் அசோக்குமார். 35 வயதுடைய அசோக் 1 வயதாக இருக்கும் போதே மூளைக் காய்ச்சலால் இரு கண்களின் பார்வையும் இழந்துள்ளார். அன்று முதல் 35 ஆண்டுகளாகப் பார்வை இல்லாமல் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அசோக்குமாரின் தாயார் அஞ்சலையம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளியான அசோக்குமார் தன்னைப் போல் பார்வை இல்லாதவர்களுக்காகத் தன் தாயாரின் கண்களைத் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து லயன்ஸ் கிளப் ஆஃப் நாகை போர்ட் டவுன் தலைவர் சண்முகம் மூலமாக கும்பகோணத்தில் உள்ள மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். அதன் பேரில் நள்ளிரவு மேலக்குறிச்சிக்கு சென்ற மருத்துவக் குழுவினர்கள் அஞ்சலையம்மாளின் கண்களைத் தானமாகப் பெற்றுச் சென்றனர்.

 

தனக்கு கண் பார்வை இல்லையென்றாலும் தன்னைப் போன்றவர்கள் கண் பார்வை பெற வேண்டும் என்பதற்காக தனது தாயின் கண்களைத் தானம் வழங்கிய அசோக்குமாரின் செயலைக் கண்டு அப்பகுதி கிராம மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். பார்வையற்ற அசோக்குமார் இது குறித்து கூறும்போது, "தனக்கு ஒரு வயது இருக்கும் போது மூளைக்காய்ச்சல் காரணமாக பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு முற்றிலும் பார்வை இழந்துவிட்டது. இனி எனக்கு பார்வை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால் விழி இல்லாத வலியை நான் அனுபவித்து வருகிறேன். அந்த வலியை எனது அம்மாவின் கண்கள் மூலமாகப் பார்வையற்றவர்களுக்கு ஒளியாக்குவதற்காகத் தானமாக வழங்கி உள்ளேன். நாம் இறந்த பிறகு எரிக்கலாமா, புதைக்கலாமா என்று யோசிக்காமல் நமது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வர வேண்டும்" என்கிறார்.

 

தனக்கு பார்வை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தன்னைப் போல் உள்ளவர்களுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக உடல் தானம் பற்றி அறியாத குக்கிராமத்தில் இருந்துகொண்டு  தன் தாயின் கண்களைத் தானம் செய்துள்ள அசோக்குமார், மனைவி மற்றும்  3 மற்றும் 2 வயதுள்ள இரண்டு பெண் குழந்தைகளோடு வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தினால் எந்த வித அரசு சலுகைகளும் பெற முடியாமல் தவித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தனது எதிர்காலத்திற்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். அடுத்தவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் மனதுடைய அசோக்குமாரின் வாழ்விலும் ஒளியேற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘ஆமைகளின் எண்ணிக்கை உயர்வு’ - வனத்துறை சாதனை!

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
The number of turtles has increased a forest dept achievement

தமிழ்நாட்டின் 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் வரலாற்று ரீதியாக ஆமைகள் கூடு கட்டுவதற்காக வருகை தருகின்றன. ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை மற்றும் லெதர்பேக் ஆமை ஆகிய ஐந்து வகையான கடல் ஆமைகள் தமிழக கடற்கரைக்கு வருகை தருகின்றன. இவற்றில், முக்கியமாக ஆலிவ் - ரிட்லி ஆமைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. அவை கூடு கட்டுவதற்கும் மற்றும் அவற்றின் தீவனமாகவும் தமிழ்நாட்டின் தென்பகுதியான கோரமண்டல் கடற்கரை அறியப்படுகின்றன, அதேசமயம் மற்ற வகை ஆமைகள் தற்போது கூடு கட்டுவது அரிதாக உள்ளன.

கடல் ஆமைகளுக்கான பருவம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கும். இந்நிகழ்வின் போது வனத் துறையானது தற்காலிக குஞ்சு பொரிப்பகங்களை உருவாக்குதல், ஊழியர்களுக்கான வழிகாட்டுதல் திட்டம் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு கூட்டங்களைத் தொடர்ந்து நடத்துதல், தினசரி இரவு ரோந்துப் பணிகளைத் தொடர்தல். மாணவர்கள் கடல் ஆமைகள் பாதுகாப்பு கூடு கட்டுதல் (SSCN) மற்றும் பிற தன்னார்வலர்களுடன் இணைந்து ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வனத் துறைப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் மூலம் கூடுகள் அடையாளம் காணப்பட்டு. வனத் துறையின் குஞ்சு பொரிப்பகங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன. 

The number of turtles has increased a forest dept achievement

இந்த ஆண்டு ஆமைகள் கூடு கட்டும் பருவத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 8 பிரிவுகளில் 53 குஞ்சு பொரிப்பகங்களை வனத்துறை அமைத்தது. 2363 கூடுகள் மூலம் மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 775 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை துறைசார் குஞ்சு பொரிப்பகங்களுக்கு மிக நுட்பமாக இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த அனைத்து குஞ்சு பொரிப்பகங்களிலும் ஒவ்வொரு குஞ்சும் வெளிவரும் வரை இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு செய்யும் போது அனைத்து கூடுகளின் அளவீடுகள் மற்றும் வெப்பநிலை உட்பட அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. அதனையொட்டி இந்த ஆண்டு வனத்துறை, 2 லட்சத்து 15 ஆயிரத்து 778 ஆமைக் குஞ்சுகளைக் கடலுக்கு அனுப்பியுள்ளது. இதுவே. இதுவரை பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகபட்சமாகும்.

கடந்த ஆண்டு 1 லட்சத்து 82 ஆயிரத்து 917 குஞ்சுகள் அனுப்பப்பட்டன. கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை மாவட்டங்களில் முறையே கடலூர் 89 ஆயிரத்து648, நாகப்பட்டினம் 60 ஆயிரத்து 438 மற்றும் சென்னை 38 ஆயிரத்து 230 என அதிக அளவில் ஆமை குஞ்சுகளை அனுப்பியுள்ளன. இந்த ஆண்டு, வனத்துறையிலிருந்து 185 கள ஊழியர்களும் மற்றும் 264 தன்னார்வலர்களும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் தீவிரமாகப் பங்கேற்றனர். இத்துறையின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மையங்களை அமைப்பதாகத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள் தானம்; பலருக்கு கிடைத்த மறுவாழ்வு

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Organ donation of a passed away person at Trichy Government Hospital

நாமக்கல் மாவட்டம், வரகூரைச் சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 28 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். இவரை மீட்டு திருச்சி கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நபர் மூளைச்சாவு அடைந்தார். இதனை அவரது உறவினர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர்.

இதனையடுத்து மூளைச்சாவு ஏற்பட்டவரின் கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர். அரசு வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் முன்னுரிமையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு வருடங்களாகத் தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது நபருக்கு வழங்கப்பட்டது.

இவை தொடர்பான அறுவை சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை (மே 30) நடைபெற்றது. மருத்துவமனை முதல்வர் டி. நேரு, தலைமையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் குழுவினர், சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் நூர்முகமது மற்றும் குழுவினர், மயக்கவியல் மருத்துவர் சந்திரன் மற்றும் குழுவினர் மற்றும் செவியலியர் குழு, செவிலியர் உதவியாளர் குழு உள்ளிட்டோர் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக, மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 27 ஆவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இரண்டு கண்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டதையடுத்து உயிரிழந்தவரின் உடலுக்கு திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பின்னர் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலுறுப்புகளை வழங்கிய உறவினர்களுக்குப் பயன்பெற்றவர்கள் தரப்பிலும் மருத்துவர்கள் தரப்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.