Skip to main content

பு.முட்லூரில் கருணை விழிகளின் சத்தமில்லா சாதனைகள்!

Published on 02/12/2020 | Edited on 03/12/2020

 

viruthachalam Humanity

 

சத்தமில்லாமல், சில சாதனைகளைச் சிலர் செய்வதால் தான் மனிதநேயம் எங்கோ ஒரு மூலையில் உள்ளது என்பதை நாம் உணர முடிகிறது.

 

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் கடந்த 2002- 2005 ஆம் ஆண்டு இளங்கலை கணினி கல்வி பயின்ற உளுந்தூர்பேட்டை அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கரன், 7 நண்பர்களை ஒருங்கிணைத்து அப்பகுதியில் உள்ள முகந்தரியான்குப்பம், சிறுவரப்பூர், சின்ன கோட்டுப்பாலை, பெரிய கோட்டுப்பாலை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2003 -ஆம் ஆண்டு கிராமப்புற மாணவர்களுக்கு மாலை நேர வகுப்பு உள்ளிட்ட கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், கடந்த 2004 -ஆம் ஆண்டு 'கருணை விழிகள்' எனப் பதிவு செய்யப்பட்டு, கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வி குறித்து அனைத்து உதவிகளையும் செய்து வந்துள்ளனர் இந்த நண்பர்கள். கடந்த 2004 -ஆம் வருடம் பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமி பாதித்தது. தொண்டு நிறுவன உதவியுடன் இந்தப் பகுதியில் வந்து, அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில மாதங்கள் உதவி செய்துள்ளனர். அப்போது பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் பார்த்து இவர்களை ஏன் நாம் வளர்க்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

 

viruthachalam Humanity

 

அதனைத் தொடர்ந்து, பரங்கிப்பேட்டை பகுதியில் பள்ளிகால நண்பர்களான பெரியகுமட்டி மரகதம், சரஸ்வதி, விழலா, வெங்கடேசன் ஆகியோர்களின் கூட்டு முயற்சியால் பு.முட்லூர் பகுதியில் 'கருணை இல்லம்' எனத் தொடங்கி பெற்றோர்களை இழந்த குழந்தைகளை, அரசு அனுமதியுடன் வளர்த்து வருகிறார்கள். இந்தக் கருணை இல்லத்தின் செயல்பாடுகளை, நன்கு ஆய்வு செய்த அப்போதைய சிதம்பரம் சார் ஆட்சியராக இருந்த சுப்பிரமனியன் ஐ.ஏ.எஸ்., அரசு சார்பில் மஞ்சக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பு.முட்லூரில், 10 சென்ட் இடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு, அரசிடம் இருந்து எந்த உதவியும் இல்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு நண்பர்களின் உதவிகளைப் பெற்று கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட பெற்றோர்களை இழந்த ஆண் பிள்ளைகள் தங்கியிருக்கிறார்கள்.

 

பிள்ளைகள் வயதுக்கு ஏற்றவாறு கருணை இல்லத்திற்கு அருகே இருக்கும் சம்பந்தம் கிராமத்திலுள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், பு.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்கள். கருணை இல்லத்தில் மாணவர்களுக்குத் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'விழி' கலைக்குழு என்ற பெயரில் 'பறையிசை', 'சிலம்பாட்டம்', 'சாட்டையடி', 'சாக்கை' உள்ளிட்ட பாரம்பரியக் கலைகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

 

இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 -ஆம் ஆண்டு, கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 'விழி' கலைக்குழு மாணவர்கள் பங்குபெற்று பாரம்பரிய கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாவட்ட அளவிலான இரண்டாம் பரிசை, அப்போது ஆட்சியராக இருந்த அன்புச்செல்வனிடம் பெற்றுள்ளனர்.

 

பள்ளி நேரத்தை முடித்து, கருணை இல்லத்திற்கு வரும் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள், பள்ளியில் கொடுக்கப்படும் வேலைகள் குறித்து, சிவசங்கரன் மற்றும் மரகதம் ஆகியோர் பிள்ளைகளுடன் தங்கிக்கொண்டு பயிற்சி கொடுக்கிறார்கள். இது பிள்ளைகளின் கல்வித் திறனை அதிகரிக்கும் வகையில் உள்ளதாக, கருணை இல்லத்தின் அருகே உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

 

viruthachalam Humanity

 

இதனைத் தொடர்ந்து, இங்கு கல்வி பயின்ற மாணவர்கள், 3 பேர் மேல்நிலை கல்வியை முடித்து, 'அகரம்' ஃபவுண்டேஷன் மூலம் இளங்கலை பட்டப்படிப்புக்குக் கல்லூரியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கருணை விழிகளுடன், கருணை இல்லம் அனைத்துத் தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையறிந்த சிலர், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களில் இங்குள்ள பிள்ளைகளுக்கு உணவு, உடைகளை வழங்கி உதவி செய்கிறார்கள். இதனைக் கொண்டு, அவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

 

cnc

 

இதுமட்டுமல்லாமல், 'கருணை இல்லம்' மூலம் சம்பந்தம் கிராமத்தில் உள்ள, தூர்ந்துபோன குளத்தை மிகச் சிறப்பாக நண்பர்களின் உதவிகளோடு தூர்வாரி, குளக்கரையில் பனைவிதைகள் நடுவது குறித்து, கருணை இல்லப் பிள்ளைகள் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தற்போது குளத்தில் தொடர்ந்து தண்ணீர் இருப்பதால், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர்த் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது என்று அந்தக் கிராம மக்கள் கூறுகிறார்கள்.

 

மேலும், பெண்களுக்குக் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பது, அவர்களின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவது போன்று கிராமத்தில் தங்கிக்கொண்டு சத்தமில்லாமல் பல சாதனைகளைச் செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிழற்குடையில் வசித்த ஐஸ் வியாபாரி- கோட்டாட்சியர் முயற்சியால் கிடைத்த வீடு; குவியும் பாராட்டுகள்

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
An ice dealer who lived in Nilukudai - a house obtained through the efforts of Kotatsiyar; Accumulations abound


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை முருகன் கோயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு நிழற்குடையில் தவளைக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான சுப்பிரமணியன் தனது சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியுள்ளார். சுப்பிரமணியன் பகலில் சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று ஐஸ் வியாபாரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தில்தான் மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்தார்.

பகலில் மாற்றுத்திறனாளி பெண் மட்டுமே அங்கிருந்தார். கரோனா காலத்தில் அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளர் அரங்க.வீரபாண்டியன் ஆய்வு மேற்கொண்ட போது நிழற்குடையில் தங்கி இருந்த இவர்களுக்கும் உணவு வழங்கியதோடு அவர்களுக்கு என்று தனி வீடு கட்டிக் கொடுக்க நினைத்தார். இதையறிந்த ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

இந்நிலையில் தான் கந்தர்வக் கோட்டையில் நடந்த சமாபந்திக்கு வந்த புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம், பேருந்து நிழற்குடையில் வயதான தந்தையுடன் வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். மனைப்பட்டா கொடுத்தால் உடனே வீடு கட்டிக் கொடுக்கிறேன் என்று கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் கோரிக்கை வைக்க உடனே அந்த நிழற்குடைக்குச் சென்று மாற்றுத்திறனாளி பெண்ணை சந்தித்து விபரங்களை கேட்டறிந்த கோட்டாட்சியர், உடனே வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்ய வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து கொத்தகம் கிராமத்தில் இடம் தேர்வு செய்து மனைப்பட்டா வழங்கியதுடன் அவர்களுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுத்ததுடன் உதவித் தொகைக்கும் விண்ணப்பித்துள்ளார். அதே நேரத்தில் மனைப்பட்டா கிடைத்தவுடன் கோட்டாட்சியரிடம் சொன்னது போல வீடு கட்டத் தயாரான கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், தனது சொந்த செலவில் ரெடிமேட் கான்கிரீட் சுவர் அமைத்து ஆஸ்பெட்டாஸ் சீட்டில் அழகிய வீடு கட்டி மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிப்பறை வசதிகளையும் செய்தார். கூடுதல் செலவினங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணின் தேவையறிந்து அவருக்கான உதவிகளை இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி செய்தார்.

இந்தநிலையில் கோட்டாட்சியர் முருகேசனை தொடர்பு கொண்ட கிராம நிரவாக அலுவலர் வீரபாண்டியன், உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றி வீடு கட்டி முழுமை அடைந்துள்ளது சார் குடியரசு தினத்தில் நீங்கள் வந்து வீட்டை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அன்புக் கோரிக்கை வைக்க கொத்தகம் சென்ற கோட்டாட்சியர் வீட்டை திறந்து வைத்து குடியேற்றி வைத்து கிராம நிர்வாக அலுவலரையும்  இணைந்து செயல்பட்ட இளநிலை உதவியாளர் பரமேஸ்வரியையும் பாராட்டினார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு முதியவர் சுப்பிரமணியனுக்கு ஒரு விபத்தில் கை உடைந்ததால் ஐஸ் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருவதால் அவர் பெட்டிக்கடை வைக்க உதவி செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார். யாரேனும் உதவும் நல் உள்ளங்கள் மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்துக் கொண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வருமானமின்றி உள்ள சுப்பிரமணியனுக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உதவலாம்.

இதனைப் பார்த்த கிராம மக்கள் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் உதவிய உள்ளங்களை பாராட்டி வருகின்றனர்.

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.