Skip to main content

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; விருதுநகர் மாவட்ட பாஜக தலைவர் கைது 

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

virudhunagar west district bjp chief government job related incident 
சுரேஷ்குமார் - கலையரசன்

 

விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமாரும், விருதுநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கலையரசனும் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்கள். இவ்விருவரும் சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனிடம், அவருடைய மகன்களான கார்த்திக் மற்றும் முருகதாஸ் ஆகியோருக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், தென்னக ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கடந்த 2017ல் ரூ.11 லட்சம் பெற்றனர்.  கடந்த 5 வருடங்களாக வேலை வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்தனர்.

 

இந்நிலையில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பாண்டியன் முறையிட,  ரூ.2 லட்சம் வீதம் 5 காசோலைகளும், ரூ.1 லட்சத்துக்கு ஒரு  காசோலையும் பாண்டியனிடம் தந்தனர். அதில் ஒரு காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ரூ.2 லட்சம் ரொக்கம் கொடுத்துள்ளனர். மற்ற  காசோலைகள் வங்கியிலிருந்து திரும்பியதால், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம்  பாண்டியன் புகாரளித்திருந்தார். அவரது புகாரில் பா.ஜ.க. மாநில பொதுச்  செயலாளர் ராம ஸ்ரீனிவாசனின் பெயரும் இருந்தது.

 

இதுகுறித்து நாம் ராம ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, “நான் ரயில்வேயில் எந்த பொறுப்பிலும் இல்லை. ரயில்வே அதிகாரிகள் எதற்காக என்னை சிவகாசி பெல் ஹோட்டலுக்கு வந்து பார்க்க வேண்டும். அவர்களிடம் பாண்டியன் பணம் கொடுத்த விபரம் எனக்கு தெரியாது. என் மீதான பொய்யான குற்றச்சாட்டு இது.” என்று  மறுத்தார். 15-12-2022 அன்று கலையரசனை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். சுரேஷ்குமாருக்கு ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றம், ரூ.5,50,000 ரொக்க ஜாமீன் செலுத்துமாறு அறிவுறுத்தியது. ரொக்க ஜாமீன் செலுத்துவதற்கான காலக்கெடு மே 12 ஆம் தேதி முடிந்தும், அத்தொகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரால் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பா.ஜ.க.வில் யாரோ ஒரு முக்கிய தலைவர் ஏதோ ஒரு காரணத்துக்காக  சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து ஆதரவாகச் செயல்படுகிறார் எனச் சந்தேகம் கிளப்பும் விருதுநகர் மாவட்ட பா.ஜ.க.வினர், மோசடி விவகாரம் வெளிப்பட்டு 5 மாதங்கள் கடந்தும்,  சுரேஷ்குமார் கைதாகியும் கூட, அவரை விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து இன்னும் நீக்கவில்லையே என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்