விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் 14 வயதுள்ள குமரகுரு.இவர், கடந்த 3ஆம் தேதி விக்கிரவாண்டி அருகேஉள்ள டோல்கேட் பகுதியில்,சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, ரூ.21,700 கீழே கிடந்துள்ளது.
அந்த பணத்தைக் கண்டெடுத்த சிறுவன், இது குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். இவரது நேர்மையைக் கண்டு வியந்த காவல்துறையினர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அந்தச் சிறுவன்பணத்தை மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணனிடம் அளித்தார்.
விசாரணையில், இந்தப் பணம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் மணிசங்கருடையது (29 வயது)என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் வரவழைத்து விசாரித்ததில் டிரைவராக உள்ள மணிசங்கர், சென்னையிலிருந்து கோவைக்குச் சரக்கு லாரி ஓட்டிச்சென்றபோது, விக்கிரவாண்டி டோல்கேட் அருகே அவரின் லாரி பழுதாகியுள்ளது.
அப்போது லாரியைசரி செய்துகொண்டிருந்தபோது, மணிசங்கரின் பணம் தவறி கீழேவிழுந்துள்ளது. இது, அவருக்குத் தெரியவில்லை. அது தனது பணம்தான் என்று அவர் தகுந்த ஆதாரங்களுடன் கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், பணத்தை மீட்டெடுத்த சிறுவன் குமரகுரு முன்னிலையில், லாரி டிரைவர் மணி சங்கரிடம் அந்தப் பணத்தைச் சிறுவனின் கரங்களாலேயே கொடுக்க வைத்துள்ளார். மேலும், சிறுவனின் செயலைப் பாராட்டும்விதமாக அச்சிறுவனுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.