Skip to main content

அன்பு ஜோதி ஆசிரமத்தின் பகிர் பின்னணி; வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் 

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

villupuram anbu jothi foundation case changed cbcid investigation 

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் அனுமதியின்றி அன்பு ஜோதி என்ற பெயரில் இயங்கி வந்த ஆதரவற்றோருக்கான ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் நடந்ததாக எழுந்த புகாரின்படி சீல் வைக்கப்பட்டது. ஆசிரமத்தின் உரிமையாளரான கேரளாவைச் சேர்ந்த ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜூபின், கேரளாவைச் சேர்ந்த மேலாளர்  விஜி மோகன்(வயது 46), பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, பூபாலன், சதீஷ், தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் பெங்களூருவில் அம்மாநில காவல்துறையுடன் இணைந்து அங்குள்ள ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அதில், பெங்களூருவில் ஆட்டோ ராஜா என்பவர் மிகப்பெரிய அளவில் ஆசிரமம் மற்றும் மருத்துவமனை நடத்துவதும் அங்கு அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்ளிட்ட 53 பேரை கடந்த 2021ல் ஒப்படைத்து அதற்கான ரசீதை ஜூபின் பேபி பெற்றுள்ளார். கடந்த 2022 மார்ச் 4ம் தேதி ஜபருல்லா உள்ளிட்ட 13 பேர் குளியலறை ஜன்னல் கம்பியை உடைத்துவிட்டு தப்பியது தெரியவந்தது. 53 பேரில் 20 பேர் மட்டும் ஆசிரமத்தில் உள்ளனர். 20 பேர் உடல்நிலை சரியாகிவிட்டதால் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதில் மாயமான 13 பேரில் 2 பேர் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு வந்துள்ளனர். ஆனால் மீதமுள்ள 11 பேர் காணாமல் போய் ஓராண்டு ஆகிவிட்டது என்பதால் அவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை.

 

ஆட்டோ ராஜாவை கைது செய்து விசாரணை நடத்த தமிழக போலீசார் முடிவு செய்துள்ளனர். இதே போல், குண்டலப்புலியூர் ஆசிரமத்திலிருந்து ஜூபின் பேபி ராஜஸ்தான் மாநிலத்திற்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அனுப்பி வைத்திருக்கிறார். கர்நாடகா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் நடத்தும் காப்பக உரிமையாளர்கள் இணைந்து மிகப்பெரிய நெட்வொர்க் வைத்திருப்பது தனிப்படை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் இருந்து ஆண்டுக்கு 30 முதல் 50 பேரை கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற  வெளிமாநிலங்களின் காப்பகத்திற்கு அனுப்பி உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டதா என மாயமானவர்களின் உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால் இந்த வழக்கு தொடர்பான விவரங்களை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இதுகுறித்து செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி கூறுகையில், "பலர் காணாமல் போனதால் ஆசிரமத்தின்  உரிமையாளர் ஜூபின் பேபியை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை  நடத்தினோம். ஆனால் அவர் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்த வழக்கில் புலன் விசாரணைக்கு 4 தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

இதற்கிடையே கொரோனா காலத்திலும் அதற்கு முன்பும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த ஆதரவற்றோர்களின் சடலங்களை ஜூபின் பேபி எடுத்து வந்து அடக்கம் செய்துள்ளார். சிலரின் சடலங்களை போலீசார் முன்னிலையில் புதைத்துவிட்டு  சுமார் 300 சடலங்களை இதுவரை எரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி எரிக்கப்பட்டவை அனைத்தும் ஆதரவற்ற சடலங்களா அல்லது ஆசிரமத்தில் இருந்து மாயமானவர்களையும் இதே பட்டியலில் சேர்த்து அவர் எரித்திருக்கலாமா என அஞ்சப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் மரிய ஜூபின் (வயது 45). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர், மகள்களைப் பிரிந்த மரியாவுக்கும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜூபின் பேபிக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கேரளாவில் இருந்து கடந்த 2003ல் விழுப்புரம் வந்தவர்கள் விக்கிரவாண்டி அருகே குண்டலபுலியூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது ஜூபின் பேபியின் கேரள நண்பர் கோயம்புத்தூரில் ஆதரவற்றோர் ஆசிரமம் ஒன்று நடத்தி வருவதைக் கண்ட அவர், தானும் அதேபோல் ஆசிரமம் அமைக்க முற்பட்டு, நண்பரின் ஆலோசனையுடன் குண்டலபுலியூரில் சிறிய அளவில் கட்டிடம் கட்டி அதில் 5 முதல் 10 நபர்கள் வரை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்து அன்பு ஜோதி ஆசிரமம் தொடங்கி உள்ளார். ஆதரவற்றோரை காண்பித்து பல நன்கொடையாளர்களிடமிருந்து பணம் பெற்று கேரள மாநிலத்தில் பல கோடி மதிப்பிலான பல்வேறு அசையா சொத்துக்களை மனைவி மற்றும் உறவினர்கள் பேரில் வாங்கி குவித்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

பண்ருட்டியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவர், ஆசிரமத்தில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த டிரைவரை அவர் அடித்து துன்புறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. போலீசார் அந்த டிரைவரை பிடித்தால் ஆசிரமம் குறித்த மேலும் பல மர்ம தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பத்மா, புதுச்சேரி தட்சிணாமூர்த்தி நகரைச் சேர்ந்த  அண்ணன் தம்பிகளான கண்ணதாசன், நடராஜன் உட்பட 4 பேரும் மாயமானதாகப் புகார் கூறப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் இருந்து மருந்து வகைகள், முக்கிய ஆவணங்கள், 10க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஒரு கம்ப்யூட்டர், ஒரு லேப்டாப் மற்றும் ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஆகியோரின் பாஸ்போர்ட்களை வருவாய்த்துறை மற்றும் போலீசார் கைப்பற்றினர்.

 

villupuram anbu jothi foundation case changed cbcid investigation 

ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 2 பெண்கள் தனித்தனியாக புகார்கள் அளித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நேற்று விழுப்புரம் நீதிபதி அகிலாவிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். ஆசிரமத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 2 பெண்களும் தனித்தனியாக வாக்குமூலம் அளித்ததை நீதிபதி பதிவு செய்துள்ளார். ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுவதில்லை. ரேஷன் அரிசியை கடத்தல் கும்பலிடம் இருந்து மொத்தமாக வாங்கி அவற்றை சமைத்து வழங்கி உள்ளனர். ஆசிரமத்தில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு எப்போதாவது தான் குழம்பு போன்றவை வழங்கப்படுகிறதாம். மற்ற நாட்களில் கஞ்சி மட்டுமே காய்ச்சி கொடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்