Skip to main content

33 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத கிராம மக்கள்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Villagers without electricity for 33 years

புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி தலைமையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கீழ் வளையமாதேவி கிராம பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்

அந்த மனுவில், கீழ்வளையமாதேவி கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் கடந்த 33 ஆண்டுகளாக மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்தும் நேரில் வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது மழை தொடர்ந்து விட்டுவிட்டுப் பெய்து வருவதால், சாலைகள் சேரும் சகதியுமாக நடக்க முடியாத சூழ்நிலையில், கீழ் வளையமாதேவி பகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

எனவே இப்பகுதியில் வசிக்கும் 35க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கீழ்வளையாமதேவி கிளை தலைவர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

'மக்களை பட்டினிப் போட்டு கொல்கிறீர்களா?'-கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
'Are you starving the people?'- a heated argument in the village council meeting

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளகுட்டை, நிம்மியம்பட்டு, ஜாப்ராபாத் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் இன்று கலைஞர் கனவு இல்லத்தின் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. வெள்ளகுட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்றது.இதில் மண்டல துணை   வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் கலந்து கொண்டு கலைஞர் கனவு இல்லத்தின்  திட்டங்கள்  குறித்து கிராம மக்கள் மத்தியில் விளக்கமளித்தனர்.

பின்னர் அங்கு கூட்டத்திற்கு வந்திருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் பேசிய போது, இந்த கிராமத்தில் தலைவர் வார்டு உறுப்பினர் என அனைவரும் இருந்தும் இந்த கிராமத்தில் வளர்ச்சி இல்லை, கிராம சபா கூட்டத்திற்கு  கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்கள் கொடுப்பதில்லை , பெயரளவுக்கு 4 துண்டு பிரசுரங்கள் மட்டும்  அச்சடிக்கப்பட்டு வருகிறது என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில்  ஈடுபட்டார். மேலும்  சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் கொடுக்கிறீர்கள் அவர்கள் குடும்ப நலனை மட்டும் பார்க்கும் நீங்கள் வசதி இல்லாத ஏழை எளிய மக்களுக்கும்  கிராம மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் பருப்பு பாமாயில் ஆகியவை சரியாக வழங்கப்படுவதில்லை. கிராம மக்களுக்கு எந்த  உதவிகள் செய்யாமல் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் விடியல் ஆட்சி என்று கூறி மக்களை பட்டினி போட்டு சாவடிக்கிறீர்களா? என்று பல்வேறு கேள்விகளை முன் வைத்து ஊராட்சி நிர்வாகத்திடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு அதற்குப் பதிலளித்த ஊராட்சி நிர்வாகத்தினர் அடுத்த முறை அதிகமாக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்குகிறோம் என்று கூறினார். அதற்கு அவர் உங்கள் ஆட்சியே முடியும் என்று நக்கலாக பதில் அளித்தார். பின்னர் அவசர அவசரமாக கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கிராம சபை கூட்டம் முடிக்கப்பட்டது. நான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் வழங்காமல் ஏன் அவசர அவசரமாக கூட்டத்தை முடிக்கிறீர்களா என்று கூறி மேலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Next Story

நீர் நிலைகளைப் பாதுகாக்கக் குளத்தைத் தூர் வாரிய கிராம வளர்ச்சிக் குழுவினர்!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
protect  water levels near Chidambaram,  village board of village development team will open pond

சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி ஊராட்சி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக மரகதம் உள்ளார். இந்த நிலையில் இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்வதற்கு இளைஞர்கள், இளம்பெண்களைக் கொண்ட கிராம வளர்ச்சிக்குழு என்று ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதில் 25 பேர் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக ஞானகுருவும், செயலாளராக அன்புவும், பொருளாளராக சுதாவும் உள்ளனர். இக்குழுவினர் ஊராட்சியில் உள்ள 7 குளங்களை அரசை எதிர்பார்க்காமல் தாங்களே தூர்வாருவது என்றும் இதன் மூலம் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் மற்றும் ஊராட்சியில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் ஊரின் மேலத்தெருவில் உள்ள நத்தவனம் குளத்தை ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் மற்றும் கிராம வளர்ச்சிக்குழுவினர்  மண்வெட்டி, கடப்பாறைக் கொண்டு மண்ணை அள்ள பாண்டுடன் களமிறங்கினர். யாரையும் எதிர்பார்த்து நிற்காமல் குளத்தில் இறங்கி தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். குளத்தில் இருந்து குப்பைகளை அகற்றினர். அதனைத் தொடர்ந்து மண்ணை வெட்டி கரைப்பகுதியில் போடும் பணியில் ஈடுபட்டுனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்  மரகதம் கூறுகையில் எங்களது  ஊராட்சியில் கிராம வளர்ச்சி குழு என்று உருவாக்கி, கிராமத்தில்  பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தற்போது ஊராட்சியில் உள்ள குளங்களை தூர் வார முடிவு செய்து கிராம மக்களின் ஆதரவுடன்  நந்தவனம் குளத்தைத் தூர் வார ஆரம்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அனைத்து குளத்தையும் தூர் வாருவோம். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதைச் செய்து வருகிறோம். இதன் மூலம் எங்கள் கிராமத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் இருக்காது என்றார்.

இது குறித்து  கிராம வளர்ச்சி குழுவினர் கூறுகையில்  நாங்கள்  தற்போது குளத்துக்கு பணத்தை எதிர்பார்க்காமல்  எங்களது உழைப்பை பயன்படுத்தி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து குளத்தை தூர் வாரி வருகின்றனர்.  இது போன்ற விழிப்புணர்வு மற்ற  கிராம மக்களுக்கும் வர வேண்டும், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளில் ஒன்று குடிநீராகும்.  கிராமத்தல் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்கவே முதல் கட்டமாக இந்தப் பணியை கையில் எடுத்துள்ளோம். இது போல பல்வேறு நலப்பணிகளை செய்து எங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்குவோம், மாவட்ட நிர்வாகம் குளத்தைச் சுற்றி தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.