Skip to main content

லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் கைது! 

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Village officer arrested for taking bribe!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் என்ற விவசாயி. இவர், தான் கிரயமாக பெற்ற நிலத்தை பட்டா மாற்றம் செய்து தரும்படி இணைய வழி மூலம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பட்டா மாற்றம் செய்வதற்கு அதிகாரிகள் காலதாமதம் செய்துள்ளனர். இதையடுத்து ஜெயராமன், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை அணுகி உள்ளார்.

 

கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனிடம், பட்டா மாற்றம் செய்யுமாறு அனுப்பப்பட்ட மனுவிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேட்டுள்ளார். உடனே கிராம அதிகாரி கலைச்செல்வன், 2500 ரூபாய் லஞ்சமாக பணம் கொடுத்தால் பட்டா மாற்றம் செய்து தருவதாக பேரம் பேசி உள்ளார்.

 

இதனால், வேதனை அடைந்த ஜெயராமன், இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், விவசாயி ஜெயராமனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளனர். 

 

அதன்படி நேற்று கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வனை சந்தித்த விவசாய ஜெயராமன், லஞ்சப் பணம் 2500 ரூபாய் அவரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சத்யராஜ் தலைமையிலான போலீசார் கலைச்செல்வனை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

 

மாவட்டம் தோறும் தினசரி லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்து வரும் நிலையில், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் அலுவலர்களும் அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று துணிந்து லஞ்சம் வாங்குவதும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து; 30 குழந்தைகள் காயம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
School bus overturned iccident 30 children injured

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே மூங்கில்பாடி அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான பள்ளி பேருந்து பள்ளிக் குழந்தைகளுடன் மூங்கில்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பள்ளி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயங்களுடன் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து விபத்து நடந்த இடத்தில் சின்ன சேலம் வட்டாட்சியர் கமலக்கண்ணன் நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார். மேலும் சின்ன சேலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 குழந்தைகள் காயமடைந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.