Skip to main content

“தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் விஜய் வருகை” - புஸ்ஸி ஆனந்த்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Vijay visit to all districts in Tamil Nadu says Bussy Anand
கோப்புப்படம்

தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெண்ணெய் மலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அக்கட்சியின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த புஸ்ஸி ஆனந்திற்கு கரூர் கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறினார்.

அப்போது பேசிய புஸ்ஸி ஆனந்த், “பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நம் தொண்டனை அழைத்து ஒரு லட்சம் பணம் வேண்டுமா, தளபதியின் புகைப்படம் வேண்டுமா எனக் கேட்டால், பணத்தை விட்டு விட்டு தளபதியின் புகைப்படத்தை எடுத்து செல்லும் தொண்டர்கள்தான் இருக்கிறார்கள். விரைவில் கரூர் மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜய் வருகை தர இருப்பதாகவும், உங்களைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். வரும் 2026இல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் இருக்கையில் விஜய்யை அமர வைக்க வேண்டும் என்பதே நோக்கம், அதற்காக அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும். இன்னும் 18 மாதங்கள் தான் இருக்கிறது" என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பல வருடங்கள் கழித்து சந்திப்பு” - ரம்பா நெகிழ்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vijay rambha recent clicks

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் ரம்பா. 2010 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர், கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு குடி பெயர்ந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறது. 

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் ரம்பா. ஆனால் சமீபகாலமாக லைம் லைட்டில் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் விஜய்யுடன் சந்தித்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் ரம்பா. தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை சந்திதிருந்த நிலையில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து, “பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

vijay rambha recent clicks

விஜய் மற்றும் ரம்பா இருவரும் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தச் சூழலில் விஜய்யுடன் ரம்பா எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

Next Story

“பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது” - த.வெ.க தலைவர் விஜய்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
T.V.K. leader Vijay condolence amstrong incident

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று (06-07-24) அவரதுவீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வந்தனர். 

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 8 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். சரண் அடைந்த ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

T.V.K. leader Vijay condolence amstrong incident

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.