Skip to main content

ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு?- தொற்றும் பரபரப்பு

Published on 25/09/2024 | Edited on 26/09/2024
Verdict tomorrow - contagious excitement

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன. தொடர்ந்து ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக செந்தில் பாலாஜி தரப்பு காத்திருக்கிறது.

ஜாமீன் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறையும் செந்தில் பாலாஜி தரப்பும் கடுமையான வாதங்களையும் பிரதிவாதங்களையும் வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. அதேநேரம் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்துவதற்கான அனுமதியை கடந்த 18/09/2024 அன்று காவல்துறை, சென்னையில் உள்ள எம்.பி எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்கில் செந்தில் பாலாஜி மட்டுமல்லாது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அனைவரும் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் இறுதியாக அமலாக்கத்துறையும், செந்தில் பாலாஜி தரப்பும் உச்சநீதிமன்றத்தில் வைத்த வாதங்கள் பின்வருமாறு:

செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை பொறுத்தவரை 'நான் இப்பொழுது அமைச்சராக இல்லை. அதேபோல் வழக்கில் என்னுடைய எந்தவிதமான தலையீடும் இருக்காது என ஏற்கனவே உறுதியளித்து விட்டேன். அப்படி இருக்கும் பொழுதும் தனக்கு பிணை வழங்காமல் இருப்பது தேவையில்லாத ஒன்று. மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது கொடுத்த தீர்ப்பு தனக்கும் பொருந்தும்' என செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் 'உங்களின் இடம் ஏற்கனவே கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்; சாட்சியத்தை களைப்பீர்கள் என்ற வாதத்தை அமலாக்கத்துறை கடுமையாக முன் வைக்கிறார்கள்' என்றனர்.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு, 'தான் இப்பொழுது அமைச்சராக இல்லை. அப்படி இந்த விவகாரத்தில் இருந்து நான் குறுக்கு வழியில் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் நீதிமன்றத்திற்கு முன்பாகவே வந்திருக்க தேவையில்லை. எப்பொழுதோ அதை செய்திருக்க முடியும். வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். வழக்கு தாமதப்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் தனக்கு பிணை வேண்டும். இந்த வழக்கில் ஏராளமானோரை விசாரிக்க வேண்டி இருக்கிறது. வாதங்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இது பல ஆண்டுகள் நடக்கக்கூடிய வழக்காக இருக்கிறது. அதுவரை தன்னால் சிறையில் இருக்க முடியாது. தனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்'' என கேட்டுக் கொண்டனர்.

இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது இந்த வழக்கில் பல்வேறு தலையீடுகளை செய்ய முயன்றார். தமிழக அரசு இந்த விவகாரத்தில் விசாரணையை தாமதப்படுத்தி இருக்கிறார்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கிறது. எனவே ஜாமீன் தரக்கூடாது' என்றனர். இந்த வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் சார்பாகவும் வாதங்கள் வைக்கப்பட்டது. 'தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க கூடாது என சாட்சியங்கள் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர். இந்த வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்