புதுக்கோட்டையில் கனிம வளக்கொள்கைக்கு எதிராக போராடியவர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல், மண், மலை உள்ளிட்ட கனிமவளங்கள் சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பெயருக்கு ஒரு அரசு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒதுக்கப்பட்ட அளவைவிட பல ஆயிரம் மடங்கு கனிமங்கள் வெட்டி அள்ளப்படுவதைப் பல முறை ஆய்வுகளில் கண்டறியப்பட்டாலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, விதியை மீறிய குவாரிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையைக் கூட கட்டாமல் கல்குவாரி அதிபர்கள் காலம் கடத்துவதை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இச்சூழலில், புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜகபர் அலி. சமூக ஆர்வலரான அவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வருகிறார். ஆனால், இவ்விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த 10.01.2025 அன்று, திருமயம் தாலுகாவில் கனிம வளக்கொள்கை நடப்பதாக, புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம், தோழர் ஜகபர் அலி மனு கொடுத்திருக்கிறார். அந்த மனுவில், சில குவாரிகளின் பெயர்களுடன், பல முக்கிய ஆதாரங்களையும் இணைத்து, கனிம வளக்கொள்ளை நடந்ததை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், 17.01.2025 அன்று, ஜகபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, அவ்வழியாக வந்த கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஒன்று, ஜகபர் அலியின் வாகனத்தின் மீது மோதியிருக்கிறது. இதில், ஜகபர் அலி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ஜகபர் அலியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அதாவது, கல்குவாரி அதிபர்களால் திட்டமிடப்பட்டு, இந்த விபத்து ஏற்படுத்தப்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் கனிம வளக்கொள்ளையை எதிர்த்த நேர்மையான அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் சில அரசியல் கட்சியினரின் முழு ஆதரவோடு கொள்ளை நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, ஜகபர் அலியும் திட்டமிட்டு கல்குவாரி அதிபர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இதில் அரசு அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சந்தேகிக்கிறது. எனவே, தோழர் ஜகபர் அலி மரண விவகாரத்தை விசாரிக்க, இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் மணல், கற்கள் உள்ளிட்ட கனிமவள கொள்ளையை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. ஜகபர் அலியின் குடும்பத்தினருக்கு ரூ.25 இலட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோழர் ஜகபர் அலியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.