வேலூர் சிறையில் இருக்கும்போது, பேரறிவாளனுக்கும் முருகனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளதால், இருவரையும் புழலில் மாற்றினால், அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை தெரிவித்திருப்பதாக, சிறைத்துறை தலைவர் சுனில் குமார் சிங் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி, அவரது தாய் பத்மா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சிறைத்துறை தலைவர் சுனில் குமார் சிங் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க, சிறைகளில் உறவினர்கள் சந்திப்புகளுக்கு அனுமதியளிக்கவில்லை. கைதிகள் இந்தியாவிற்குள் இருக்கும் உறவினர்களுடன் வீடியோகால் மூலம் பேச அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு, தன்னையும், தன் கணவரையும் மாற்றக் கோரி நளினி அளித்த மனு, கரோனா தொற்று காரணமாக, ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. நளினி, அற்ப காரணங்களுக்காக சக கைதிகளுடன் சண்டையிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சிறைத்துறை அதிகாரிகளைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார்.
வேலூர் சிறையில் இருக்கும்போது பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு முன் விரோதம் ஏற்பட்டுள்ள நிலையில், நளினியின் கோரிக்கையை ஏற்று அவரையும், அவரின் கணவரையும் புழல் சிறைக்கு மாற்றினால், இரு கைதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதால், சிறை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு, அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.