வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு வரும் அகஸ்ட் 5ந் தேதி காலை தொடங்கி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் ஆகஸ்ட் 3ந் தேதியுடன் முடிவடையவுள்ளன. தேர்தல் களத்தில் திமுக – அதிமுக தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்பூர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், தனக்கு வாக்களிக்க வேண்டும்மென ஒரு ஓட்டுக்கு 300 ரூபாய் என பட்டுவாடா செய்யச்சொல்ல அதன்படி அவரது கல்வி நிறுவனத்தை சேர்ந்த குழு பட்டுவாடாவை தொடங்கியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, அணைக்கட்டு தொகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு 3 பேர் கொண்ட ஒரு குழு ஜீலை 29ந் தேதி இரவு, ஒவ்வொரு வீடாக சென்று அந்த வீட்டில் உள்ள வாக்குகளை கணக்கிட்டு ஒரு வாக்குக்கு 300 ரூபாய் வீதம் தருகிறது என்கிறார்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள். மற்றப்பகுதிகளில் இன்னும் தரவில்லை எனச்சொல்லப்படுகிறது.
தீவிரமாக தேர்தல் பணியாற்றி மக்கள் மனங்களில் இருந்து திமுகவை ஒதுக்க முடியாமல் செய்துள்ளோம், இதேநிலை நீடித்தால் பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என திமுகவினர் நம்பி வந்த நிலையில், எதிர்தரப்பு 300 ரூபாய் தருவதால் தங்கள் சார்பில் 200 ரூபாய் தரத்துவங்கியுள்ளார்கள். இப்படி இரு கட்சிகளும் பட்டுவாடாவில் தீவிரமாக உள்ளன.