Skip to main content

வேதாரண்யம் பகுதியில் வேகமான காற்று, பீதியில் பொதுமக்கள்!!!

Published on 10/06/2019 | Edited on 11/06/2019

வேதாரண்யம் பகுதியில் வழக்கத்தைவிட கடந்த சிலதினங்களாக வேகமாக காற்று வீசி வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
 

wind


நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கடற்கரையோரமாக அமைந்துள்ளது. வருடத்திற்கு இரண்டு முறைக்கு குறைவில்லாமல் புயலையும், ஆண்டுதவறாமல் கோடைகாலங்களில் வறட்சியையும் சந்தித்து வரும் பகுதியாகும். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீசிய கஜா புயல் அவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டுவிட்டது, கிட்டதிட்ட அவர்களுக்கு மறுபிறவி என்றே கூறலாம் அப்படியொரு பாதிப்பைச் சந்தித்தனர். 

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடங்கிய அதிவேக காற்றானது கடற்கரையில் சுழன்றடித்து பாதிப்பை உண்டாக்கிவருகிறது. கடற்கரை மணலை அள்ளிவந்து வீதியிலும், வீடுகளிலும், சாலையில் செல்பவர்களின் முகத்திலும் வீசிவருகிறது. கடலில் அதிக சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் மின்வினியோகம் அவ்வப்போது தடைபடுவதால் கொள்ளிடம் கூட்டு குடிநீரின் வினியோகமும் பாதிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் தலைத்தூக்கிவருகிறது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில வாரங்களாக தெற்கு திசையிலிருந்து வழக்கத்தைவிட அதிவேகமான காற்று வீசி வருகிறது. ஆழ்கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக உணரப்படுவதால் மீன்பிடித்தொழிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அத்துடன் கோடியக்கரை, படகுத்துறை பகுதியில் வழக்கமாக படகுகளை நிறுத்தும் பரப்புத்துறையில் கடல்நீர் அவ்வப்போது உட்புகுந்து, வெளியேறிவருவது மீனவர்களை அச்சமடையவே செய்துள்ளது. மீனவர்கள் படகுகளை அங்கு நிறுத்த முடியாமல் அவதியுற்றுவருகின்றனர். கரையோரத்தில் சில நேரத்தில் கடல் உள்வாங்கவும் செய்கிறது.
 
காற்றின் அதிவேகத்தால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதால் மின்வெட்டும் அதிகமாக நிகழ்கிறது. அதனால் நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றமுடியாத நிலையும் உருவாகியுள்ளது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற அச்சம் அப்பகுதி மக்களின் மனதில் பதிந்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாட்டுப் பொங்கல் நாளில் களை கட்டிய மீன் விற்பனை

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Sale of  fish on Mattu Pongal day

இன்று தமிழகத்தில் மாட்டுப் பொங்கல் விழா கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் வேதாரண்யத்தில் மீன் வாங்க அசைவ பிரியர்கள் திரண்டனர். இதனால் அதிகப்படியான மீன் விற்பனை நடைபெற்றது.

வேதாரண்யம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் இன்று காலை முதலே மக்கள் அலை அலையாக கூடினர். வஞ்சிரம், காலா, வாலை, அயிலை, திருக்கை,சங்கரா, வவ்வால், நெத்திலி, கிழங்கான் ஆகிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். வௌவால் மீன் கிலோ ரூபாய் 1100 க்கும், வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், இறால், நண்டு ஆகியவை 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சில பகுதிகளில் மாட்டுப்பொங்கல் அன்று அசைவம் சாப்பிடுவது ஒரு பழக்கமாக இருக்கும் நிலையில் மீன் வியாபாரம் இன்று களைகட்டியுள்ளது. அதேபோல் கும்பகோணத்தில் உள்ள பெரியார் மீன் அங்காடியிலும் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, சண்டை உள்ளிட்ட மீன்கள் மட்டுமல்லாது கடல் மீன்களும் விற்பனைக்கு குவிக்க வைக்கப்பட்டது. விலை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்த போதிலும் மக்கள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர். இதேபோல் செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் இன்று அலை மோதியது.

Next Story

தொடர் தாக்குதல்; இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

serial attack; Case against Sri Lankan pirates

 

அண்மையாகவே இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்துவரும் நிலையில், அதேநேரம் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

 

அண்மையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வானவன் மகாதேவி கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுபோன்ற இரண்டு தாக்குதல் சம்பவங்கள் இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.