VAO exam issue - Highcourt

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 4 தேர்வில் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய பலர் தேர்ச்சி பட்டியலில் முதல் 100 இடங்களைபிடித்தனர். இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தியபோது, விடைத்தாள்களில் திருத்தம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது, குரூப்-4 தேர்வு மட்டுமல்லாமல், குரூப் - 2ஏ தேர்வு மற்றும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வு ஆகியவற்றிலும்மோசடி நடந்து இருப்பதும், ஒரு கும்பல் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதும், இதற்கு தேர்வுபணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் பலர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், முறைகேடாகபணியில் சேர்ந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

Advertisment

2016-ம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராம நிர்வாக அலுவலரான அமல்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை காணொலி காட்சி மூலம் நீதிபதி ஆர். செல்வக்குமார் விசாரித்தார். முடிவில், அமல்ராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.