
விழுப்புரம் மாவட்டம் அரியலூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது அன்னம்மாள். இவரது கணவர் அருளானந்த்தின் தந்தை மாணிக்கம் மற்றும் அருளானந்த்தின் அண்ணன் சவரிமுத்து. இவர்கள் இருவரும் 25 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். அப்போது இருவரின் இறப்பையும் விபரம் தெரியாமல் வருவாய்த் துறையில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார் அன்னம்மாள்.
தற்போது சொத்து தொடர்பாக மூவரின் இறப்புச் சான்று தேவைப்படுவதால், அன்னம்மாள் அரியலூர் திருக்கை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவை அணுகியுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, மாணிக்கம், சவரிமுத்து ஆகியோரின் இறப்பு விபரத்தை இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு ஒவ்வொரு மனுவுக்கும் 500 ரூபாய் என மொத்தம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அன்னம்மாளிடம் பேரம் பேசியுள்ளார்.
இதைக் கேட்ட அன்னம்மாள், “நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இருக்கும் கொஞ்சம் சொத்தை விற்று என் இறுதிக் காலத்தை நடத்துவதற்கு அந்த இறப்புச் சான்றுகள் தேவை. அதனால் அவை கிடைக்க உதவி செய்யுங்கள்” என்று பணிந்து கேட்டுள்ளார். அதற்குக் கிராம நிர்வாக அதிகாரி சங்கீதா, “பணம் கொடுத்தால்தான் சான்றிதழ் கிடைக்கும், எப்படியாவது பணத்தைத் தயார் செய்து எனது அலுவலகத்தில் வந்து என்னிடம் கொடுங்கள்” என்று கறாராகக் கூறியுள்ளார்.
இதனால் வேதனை அடைந்த அன்னம்மாள், இது குறித்து விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை அன்னம்மாளிடம் கொடுத்து, அதைச் சங்கீதாவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். போலீசாரின் அறிவுரையின்படி நேற்று காலை அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு அன்னம்மாள் அரியலூர் திருக்கை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு இருந்த கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்தார். பணத்தைச் சங்கீதா வாங்கும் போது அங்கு ஏற்கனவே தயாராக மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி பாலசுதாகர், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் சுற்றி வளைத்துச் சங்கீதாவைக் கைது செய்தனர்.