Skip to main content

வருவானா... மாட்டானா... ; வடிவேலு பட பாணியில் காரை கடத்திய இளைஞர் 

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

Vadivelu movie style car hijacking youth  Tindivanam

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (23). இவர் தனக்குச் சொந்தமான காரை குடும்ப செலவிற்காக விற்கப்போவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். இவரது விளம்பரத்தைப் பார்த்த சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் அமிர்தலிங்கத்தை அவரது செல்போனில் தொடர்பு கொண்டு தான் காரை விலைக்கு வாங்கப் போவதாகப் பேசியுள்ளார். அதன்படி திண்டிவனம் ரயில்வே நிலையம் அருகே காரை எடுத்து வரும்படி ராஜா கூறியுள்ளார்.

 

அமிர்தலிங்கமும்  கடந்த நவம்பர் 7ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு காரை எடுத்து வந்தார். அங்கு ஏற்கனவே வந்து காத்திருந்த ராஜா என்பவர் அமிர்தலிங்கத்தின் கார் கண்டிஷன் எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்வதற்காகக் காரை ஓட்டி ட்ரையல் பார்க்க வேண்டும் என்று ராஜா கூறியுள்ளார். அதன்படி அமிர்தலிங்கம் தனது காரை ராஜா என்பவரிடம் கொடுத்துள்ளார். காரை ஓட்டிச் சென்ற ராஜா நீண்ட நேரம் ஆகியும் காரும் வரவில்லை, ராஜாவும் வரவில்லை. பல மணி நேரம் கடந்ததே தவிர கார் திரும்பி வரவில்லை.

 

Vadivelu movie style car hijacking youth  Tindivanam

 

இதையடுத்து தன்னை ஏமாற்றி காரை திருடிச் சென்றுள்ளதை அப்போதுதான் உணர்ந்தார் அமிர்தலிங்கம். உடனடியாக திண்டிவனம் காவல் நிலையத்துக்குச் சென்று இது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கார் ட்ரையல் பார்ப்பதாகக் கூறி கடத்திச் சென்ற அந்த ராஜா என்ற நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று திண்டிவனம் மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரணை செய்தனர். அதில் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தார். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் அந்த நபர் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பீர் சுல்தான் என்பவரது மகன் 39 வயது சுலைமான் என்பதும், இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த அமிர்தலிங்கத்திடம் தான் சென்னையைச் சேர்ந்த ராஜா என, கார் வாங்க வந்திருப்பதாகப் பொய்யாக அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது காரை விலைக்கு வாங்குவதாகக் கூறி நடித்து காரை ஓட்டிப் பார்க்கச் சென்று அப்படியே காரை கடத்திச் சென்றது தெரிய வந்தது.

 

இதனைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் சுலைமான் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறையில் அடைத்துள்ளனர். காரை விலைக்கு வாங்குவதாகக் கூறி கடத்திச் சென்றவர் பிடிபட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்