
சிதம்பரம், மாலை கட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிதம்பரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த கரோனா தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர்.
இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. மேலும் முதல் தவணை ஊசி போட்டவர்களுக்கு இரண்டாவது தவணை ஊசி போடப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர். முகாமில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கல்யாணி, ராமநாதன், செந்தில்முருகன் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். அதேபோல், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மங்கை தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தடுப்பூசியால் எவ்வாறு கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விளக்கிக் கூறினார்கள்.
தடுப்பூசி போட்டுகொள்ள முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு, சந்திரசேகர், மணி, வி.என்.ஆர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட திமுகவினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, இந்திய மாணவர் சங்க சத்தியகுமார், தன்னார்வலர்கள் என பலர் கலந்துக் கொண்டு தேவையான உதவிகளை செய்தனர்.