Skip to main content

உரிமம் இல்லாத கல்குவாரிகள்... அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

Unlicensed quarries ... Court order to take action on government officials to!

 

உரிமம் இல்லாத கல்குவாரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழி தாலுகா, மொரட்டுப்பாளையம் கிராமத்தில், நிபந்தனைகளை மீறி செயல்பட்ட கல் குவாரிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட அந்த பகுதியில் உரிமம் இல்லாமல் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருவதாகவும், தங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து, அந்த பகுதியில் இயங்கும் குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் அசோக்குமாரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார். மூன்று நாட்கள் ஆய்வு நடத்தி, வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையில், அந்த பகுதியில் 64 குவாரிகள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாகவும், உரிமம் பெற்றுள்ள 24 குவாரிகளில், 18 குவாரிகள் நிபந்தனைகளை மீறி செயல்படுவதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

 

இந்த அறிக்கையை படித்த நீதிபதி, குவாரிகளை அவ்வப்போதைக்கு ஆய்வு செய்யாததால் நிர்வாகத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, உரிமம் இல்லாமல் செயல்படும் 64 குவாரிகளையும் மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

 

மேலும், இந்த குவாரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல், அவற்றை செயல்பட அனுமதித்த கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், வருவாய் இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

ஒரே பதிவு எண்ணை கொண்ட கனரக வாகனம் மட்டும் பயன்படுத்தப்பட்டதால் TN 55 Z 7753 அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். 

 

மேலும் விதி மீறி செயல்படும் உரிமம் பெற்ற குவாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.