Skip to main content

உண்டியல் உடைப்பு... முக்கியக் குற்றவாளி கைது! வீட்டை உடைத்துத் திருடியவரும் கைது!

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

Two thief arrested cuddalore

 

கரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி, கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட கோயில்களின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
 

இந்த உண்டியல் உடைப்புச் சம்பவங்கள் தொடர்பாக, பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, பெண்ணாடம் சோழன் நகரைச் சேர்ந்த நாகராஜன் மகன் அகிலன்(18), ராஜேந்திரன் மகன் கதிர்(19), சீனிவாசன் மகன் கார்த்திகேயன்(25), கணேசன் மகன் கார்த்திக் (18), சக்திவேல் மகன் சதீஷ்குமார்(19) ஆகிய 5 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.


அதேசமயம் இவர்களுக்கு மூளையாகச் செயல்பட்டுவந்த அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் என்கிற சூரியமூர்த்தி(25) என்பவர் தலைமறைவாக இருந்துவந்தார். அதேநேரம் கடந்த சில நாட்களாக பல இடங்களில் ஆட்கள் இல்லாத சமயம் பார்த்து, வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்றன. அதையடுத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் உத்தரவின்பேரில் விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் விருத்தாசலம் உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குமரேசன், பெண்ணாடம் காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த சூரியமூர்த்தியைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அவர் மீது ஏற்கனவே பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவங்களில் சூரியமூர்த்திக்கு ஆதரவாக ஈடுபட்டுவந்த அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிந்தனைச் செல்வன், வேல் மகன் பாடி(எ)விஜய் ஆகிய இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.  

 

Two thief arrested cuddalore

 

இதனிடையே கடலூர் தைக்கால் தோணித்துறை பகுதியில் தச்சு வேலை செய்துவந்த முருகன் என்பவர் கடந்த 28-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக சிதம்பரம் அருகே உள்ள முடசல்ஓடை கிராமத்திற்குச் சென்றுள்ளார். திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்துகிடந்தது. வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 6 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து முருகன், கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையாலான போலீசார் விசாரணை நடத்தியதில், முருகனுடன் பழகிய நபர்தான் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று தெரியவந்தது.

 

Ad

 

அதன் அடிப்படையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே முருகனுடன் வேலை பார்த்துவந்த மகேஷ் என்பவர் மீது, சந்தேகம் உள்ளதாக முருகன் தெரிவித்தார். அதனடிப்படையில் தோணித்துறை பஸ் நிலையத்தில் நின்றிருந்த பச்சையாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மகேஷ்(32) என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மகேஷ் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து மகேஷிடம் நகைகளைப் பறிமுதல் செய்தனர். 
 

கோயில் உண்டியல் திருட்டு மற்றும் வீட்டின் கதவை உடைத்துத் திருடிய நபர்களைக் கைது செய்த காவல் துறையினருக்கு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பாராட்டுத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.