Skip to main content

சினிமாவை மிஞ்சிய கொலை; தலையை வெட்டி வீதியில் வீசிய கொடூரம் - பரபரப்பில் ஓசூர்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Two people lost their lives in the incident that overtook the cinema in Hosur

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் பரக்கத். இவருக்கு 31 வயதாகிறது. இவரின் நண்பர், ஓசூர் பழைய வசந்த நகரைச் சேர்ந்த பொன்வண்ணன் என்கின்ற சிவா. இவருக்கு 27 வயதாகிறது. நண்பர்களான இருவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற 'பக்கா' பிரகாஷ் என்பவரோடு நட்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில் இந்த மூவரின் மீதும் ஓசூர் நகர காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பக்கா பிரகாஷை போலீசார் தேடி வந்தனர். ஒரு வழியாக அவரைக் கைது செய்த போலீசார், சேலம் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் 6 மாத காலமாகத் தண்டனை அனுபவித்து வந்த பிரகாஷ், கடந்த 19 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 6 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு ஜாமீனில் வெளிவரும் தங்களின் நண்பனை அழைத்து வருவதற்காக, பரக்கத் மற்றும் சிவா இருவரும் காரில் சேலம் சிறைச் சாலைக்குச் சென்றுள்ளனர். அப்போது சிறையிலிருந்து வெளியில் வந்த பக்கா என்ற பிரகாஷை அழைத்துக்கொண்டு ஓசூருக்கு மகிழ்ச்சியாக வந்துள்ளனர். 

இது ஒருபுறமிருக்க, சிறையிலிருந்து வெளியில் வரும் பிரகாஷிற்கு ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த முன் விரோதம் காரணமாக அவரைத் தீர்த்துக்கட்ட ஒரு குழு தீட்டம் தீட்டிக் காத்திருந்துள்ளது. இதற்கிடையில், சேலத்திலிருந்து காரில் வந்த மூன்று பேரும், பக்கா பிரகாஷ் வீடு இருக்கின்ற பார்வதி நகருக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே இவர்கள் மூவரும் வருவதை அறிந்து காத்திருந்த 15 பேருக்கும் மேற்பட்ட மர்ம கும்பல், அவர்கள் செல்லும் வழி அனைத்தையும் ரகசியமாக கண்காணித்துள்ளது. அதே சமயத்தில், நள்ளிரவு நேரத்தில் பிரகாஷை விடுவதற்காகச் சென்ற இருவரும், அங்கு சிறிது நேரம் நின்று பேசிவிட்டு, அதன் பின்னர், பிரகாஷை வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். பிரகாஷ் வீட்டிலிருந்து சிறிது தூரம் தெருவில் நடந்து சென்றபோது, சுமார் 15க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் திடுதிடுவென வந்துள்ளது. 

அப்போது, அந்தக் கும்பலைப் பார்த்து யாரென சுதாரிப்பதற்குள் அவர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, மர்ம கும்பல் வைத்திருந்த ஆயுதத்தால் சிவாவை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர். படுகாயங்களோடு நிலைகுலைந்து கீழே விழுந்த சிவாவின் தலையைத் துண்டித்து அதனை வீதியில் வீசியுள்ளனர். இதற்கிடையில், தன்னை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற தனது நண்பர்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கப்படுவதைக் கண்ட பிரகாஷ், வீட்டிலிருந்து சுவர் ஏறிக் குதித்து தப்பித்துள்ளார். ஆனால், அதே சமயத்தில் சிவாவோடு இருந்த பரக்கத் அங்கிருந்து தப்பித்து, பிரகாஷ் வீட்டிற்குள் ஓடி, கதவினை தாழ்ப்பாள் போட்டு மூடியுள்ளார்.

ஆனாலும், அவரை விடாமல் துரத்திச் சென்ற மர்ம கும்பல், பிரகாஷ் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது. அங்கு பரக்கத் மட்டும் இருப்பதைப் பார்த்த மர்ம கும்பல், உள்ளே நுழைந்து அவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இதனால் நிலைகுலைந்து விழுந்த பரக்கத் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 

இதனையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது. இந்நிலையில், அந்தக் கும்பலிடம் இருந்து உயிர் தப்பித்த பக்கா பிரகாஷ், காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த அனைத்தையும் கூறி தனக்குப் பாதுகாப்பு கேட்டுள்ளார். அதன் பின்னர், இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து, ஓசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் மற்றும் ஓசூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் பரக்கத் மற்றும் பொன்வண்ணன் என்கிற சிவா ஆகிய இருவரின் உடலையும் கைப்பற்றி பிரதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர், கொலை செய்தவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? எதற்காக கொலை நடந்தது? எனப் பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் ஓசூரில் நடந்த இரட்டைக் கொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்