
மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திலிருந்த மின்சார வயர்களை டெலிஃபோன் வயர் என நினைத்து, அதனைத் திருடி விற்க முயன்ற நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள இரும்புக் கடையில் வேலை பார்த்து வருபவர்கள் செந்தில்குமார் மற்றும் மணிகண்டன். இவர்கள் சென்னை புளியந்தோப்பு பகுதியில் டிம்லர் சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திலிருந்த வயர்களை பார்த்துள்ளனர். அவற்றை டெலிஃபோன் வயர் என நினைத்து வெட்டி விற்பனை செய்யலாம் என்ற நோக்கத்தில் அதிகாலையில் குழிக்குள் இறங்கி கேபிள்களை வெட்டியுள்ளனர். ஆனால் அங்கு இருந்தது உயர் மின்னழுத்த வயர்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. வயர்களை வெட்ட முயன்றபோது இருவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி எறிந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். செந்தில்குமார் அதே இடத்தில் உயிரிழந்த நிலையில், மணிகண்டன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.