Skip to main content

தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

tuticorin  youth  case: Inspector suspended

 

 

தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த செல்வன் குடும்பத்தினருக்கும் அந்தப் பகுதியின் உசரத்துக்குடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வன், தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனிடம் புகார் செய்துள்ளார். இதேபோல் திருமணவேலுவும் புகார் செய்ததாகவும், திருமணவேலு புகாரின் அடிப்படையில் செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

தனக்கு நியாயம் வேண்டி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையிட்டிருக்கிறார் செல்வம். செப் 16 அன்று அதற்குப் பதில் மனு தாக்கல் செய்யும்படி இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணனுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனிடையே கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவரது பைக் மீது கார் மோதியதில் அவர் கீழே விழ அவரைக் காரில் கடத்திச் சென்ற ஒரு கும்பல் உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே 17ம் தேதியன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட செல்வத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்கவில்லை. திருமணவேல், இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும். செல்வம் மனைவி செல்வஜீவிதாவிற்கு உரிய நிவாரணம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், செல்வன் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறியதோடு அவர்களது போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

 

நான்காவது நாளாக இன்றும் அவர்களது போராட்டம் தொடருகிறது. இந்த வழக்கில் இன்று பிற்பகல் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இன்ஸ்பெக்டரை தற்போது சஸ்பெண்ட் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபினவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய திருமணவேல் மற்றும் ஒருவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.